யாழ். செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

You are currently viewing யாழ். செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!
யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.

 

செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு வியாழக்கிழமை (13) அத்திவாரம் வெட்டும் போதே மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.

அதனை அடுத்து, கட்டட வேலைகளை முன்னெடுத்த ஒப்பந்தக்காரர், இது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை மற்றும் மயான அபிவிருத்தி சபையினருக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில், கட்டட பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

1996ஆம் ஆண்டு சுண்டுக்குளி மாணவி கிருஷாந்தி உள்ளிட்ட 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை 1995ஆம் ஆண்டு மற்றும் 96ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பலர் படுகொலை செய்யப்பட்டு, செம்மணி பகுதியில் உள்ள வயல்வெளிகளில் புதைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் பகுதிகள், குறித்த மயானத்தை அண்மித்த பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply