யாழ். நகர அபிவிருத்தியில் பாரிய ஊழல்!

You are currently viewing யாழ். நகர அபிவிருத்தியில் பாரிய ஊழல்!

யாழ். நகர அபிவிருத்தியில் கொழும்பிலுள்ள நகர அவிருத்தி அதிகார சபை தலைமையகம் பாரிய ஊழல் செய்துள்ளதாகவும் அதனை மூடி மறைப்பதற்கு யாழ் மாநகர சபை நிர்வாகத்திற்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதா? பாராளுமன்றத்தில் செல்வராஜா கஜேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தந்திரோபாய நகர அபிவிருத்தி திட்டத்தின் (Stertagic City Development Project) கீழ் இலங்கையில் மூன்று முக்கியமான நகரங்களை அபிவிருத்தி செய்வதற்காக உலக வங்கியினால் கடந்த காலத்திலே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் யாழ்ப்பாணம் நகர அபிவிருத்திக்காக 55 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிதியில் இருந்து 1870 மில்லியன் ரூபா வடிகால் அமைப்பு மாஸ்டர் பிளான் தயாரிப்பு மற்றும் வடிகால் அமைப்பு வேலை திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிதியிலிருந்து யாழ் நகரத்திற்கான வடிகால் அமைப்பு மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கொழும்பில் இருக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபை தலைமையகத்தினாலே கொழும்பில் இருக்கக்கூடிய தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்ட தனியார் நிறுவனம் யாழ்ப்பாணம் நகரத்திற்கான வடிகால் அமைப்பு மாஸ்டர் பிளான் தயாரிக்கின்ற பொழுது அதற்கு தேவைப்படுகின்ற மிக முக்கியமான தரவுகளான மழை வீழ்ச்சித் தரவுகள் மற்றும் தரை உயர தரவுகள் இரண்டும் இல்லாமல் ஒரு போலியான ஒரு வடிகால அமைப்பு மாஸ்டர் பிளான் ஒன்றை தயாரித்திருந்தது.

அந்த தவறான தரவுகளுடன் தயாரிக்கப்பட்ட Master plan அடிப்படையிலேயே அதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. வடிகால அமைப்பு மாஸ்டர் பிளான் தயாரிப்பதில் பாரிய ஊழல் நடைபெற்றுள்ளது. அவ்வாறு தயாரிக்கப்பட்ட தவறான மாஸ்டர் பிளானை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வடிகால் அமைப்பு கட்டுமான பணிகளிலும் பாரிய ஊழல்கள் நடைபெற்று இருக்கின்றது.

இப் பிரச்சினைகள் தொடர்பாக 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டிசம்பர் மாதம் நடைபெற்ற யாழ்ப்பாணம் பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் நல்லூர் பிரதேச செயலாக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் அம்பலப்படுத்தி இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருந்தேன்.

2020 நவம்பர் மாதம் நாடாளுமன்றத்திலும் இந்த விடயங்கள் தொடர்பாக நான் அம்பலப்படுத்தி இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன். எனினும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் விவாதத்தின் போதும். இந்த பிரச்சினையை நான் அம்பலப்படுத்தி இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தேன். அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான வடிகால அமைப்பு மாஸ்டர் பிளான் ஒன்று முழுமையாக தயாரிக்கப்பட வேண்டும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தேன்.

அது மட்டுமன்றி நம்பர் மாதம் நடைபெற்ற நகர அபிவிருத்தி திட்டமிடல் மற்றும் வீடமைப்பு அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனை குழு கூட்டத்திலும் இந்த பிரச்சனை தொடர்பாக நான் வெளிப்படுத்தி முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன். அப்பொழுது ஆலோசனை குழு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அமைச்சு சார்ந்தவர்கள் அந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை தரப்படும் என்று உறுதியளித்திருந்தார்கள். ஆனால் இன்று வரை என்ன நடந்தது என்பது தொடர்பாக எந்த தகவலும் தரப்படவில்லை.

இந்த ஊழல் தொடர்பாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தினால் இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்று இடம்பெறுகின்ற நகர அபிவிருத்தி திட்டமிடல் மற்றும் வீடமைப்பு அமைச்சினுடைய இன்றைய குழுநிலை விவாதத்திலே நான் மீண்டும் இந்த பிரச்சினையை கௌரவ அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

இது தொடர்பாக ஒரு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். உங்களுடைய அரசாங்கத்திலே முக்கிய அமைச்சராக இருக்கிற டக்ளஸ் தேவானந்தா அவர்களுடைய ஈபிடிபி அமைப்பின் ஆளுகையிலே யாழ்ப்பாண மாநகர சபை இருக்கின்றது. அந்த மாநகர சபையினுடைய முக்கியஸ்தர்கள் கொழும்பிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையினுடைய தலைமையகத்துடன் இணைந்து இந்த ஊழலை மூடி மறைப்பதற்கு துணை நிற்கின்றார்கள். இந்த ஊழலை முடி மறப்பதற்காக யாழ் மாநகர சபையினுடைய முக்கியஸ்தர்களுக்கு பெருந்தொகை பணம் இலஞ்சமாக கொடுக்கப்பட்டதா என்கின்ற ஒரு சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது என தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply