சிறைச்சாலை அதிகாரிகளால் யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதியொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.
நாவற்குழி ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த 40 வயதான கைதியே உயிரிழந்துள்ளார்.
இவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் (12) யாழ். நீதவான் நீதிமன்றில் நடைபெறும் வழக்கு விசாரணைக்காக சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து, சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்குப் பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டது.