அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் கைது நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக முன்றலில் மாணவர்களால் இன்று நண்பகல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டத்தில் “மாணவர் மீதான அடக்குமுறை ஒழிக” , “ தமிழருக்குரிய தீர்வுகளை வழங்காது தொடரும் கைதுகள்” , “அப்போது நல்லாட்சி இப்போது நரியாட்சியா”, கருத்துச் சுதந்திரத்தை பறிக்காதே”, “சிவில் சமூகத்தை அடக்காதே”, போன்ற பதாதைகளை தாங்கியவாறு மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்தில் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். அவரின் வருகைக்கு எதிராக யாழில் பொதுஅமைப்புக்களின் ஏற்பாட்டில் அமைதிவழிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நீர்த்தாரை நடவடிக்கையை பொலிசார் மேற்கொண்டதால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. குறித்த சம்பவத்தை அடுத்து நேற்று மாலை தவத்திரு வேலன் சுவாமிகளை பொலிஸ்நிலையத்துக்கு அழைத்த பொலிசார் அவரை கைது செய்ததுடன், 4 மணிநேர விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை பொலிசார் விசாரணை செய்துவருவதால் குறித்த கைது நடவடிக்கைகளை கண்டித்து மாணவர்கள் மேற்குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். |