யாழ்ப்பாணம் – பொன்னாலை கிராமத்தில், 170 சமுர்த்தி அலுவலகத்தில் இன்று (06) காலை 8.30 மணிதொடக்கம் சமுர்த்தி பயனாளிகள் சமுர்த்தி கொடுப்பனவுக்காக தவம் கிடந்தபோதும் சமுர்த்தி உத்தியோகத்தர் 11.00 மணிவரை வரவில்லை என மக்கள் கூறினர்.
ஏனைய இடங்களில் வீடுகளுக்கு சென்று சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படுகின்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவர் அலுவலகத்திற்கு மக்களை அழைத்து கொடுப்பனவை வழங்கியிருக்கின்றார்.
கொடிய கொரோனா வைரஸ் காரணமாக மக்களை வெளியே வரவேண்டாம் எனக் கூறிய சிறிலங்கா அரசு கொடுப்பனவுகள் அனைத்தும் அலுவலர்கள் ஊடாக வீடுகளுக்கு அனுப்பப்படும் என தெரிவித்திருக்கின்றது.
இவ்வாறான நிலையில், மக்கள் குழுமியிருப்பது தொடர்பாக அப்பிரதேச உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் சமுர்த்தி உத்தியோகத்தரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்தார்.
‘அலுவலகத்திற்கு வந்து மக்களுக்கு விடயத்தைக் கூறி அவர்களை வீடுகளுக்கு அனுப்புங்கள். மக்கள் முக்கவசங்கள் கூட இல்லாமல் நிற்கிறார்கள்’ என கூறிபோது பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்துவிட்டு அழைப்பை துண்டித்தார் என மேற்படி உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிந்துகொண்ட பொதுச் சுகாதார பரிசோதகர் அந்த இடத்திற்கு வருகைதந்து மக்களை வீடுகளுக்கு அனுப்பினார்.
இப்பிரதேச மக்களுக்கு சமுர்த்தி இடர்கடன் 10000 இதுவரை முழுமையாக வழங்கப்படாததுடன் பொருள் விநியோகம் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. இதனாலேயே மக்கள் சமுர்த்தி அலுவலகத்தை நோக்கி படையெடுக்கின்றனர்.
சிறிலங்கா அரசு அறிவித்ததைப் போன்று மக்களுக்கு உரிய வகையில் உதவிகள் சென்று சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.