யாழ் மாநகர சபை சுகாதார ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை இன்று புதன்கிழமை முன்னெடுத்துள்ளனர்.
மாநகரசபை நுழைவாயில் முன்பாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள சுகாதார தொழிலாளர்கள் தமது கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட தரப்புக்கள் நிறைவேற்றாது விட்டால் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக அவர்கள் தெரிவுத்துள்ளதாவது…
நிரந்தர நியமனம் வழங்குமாறு பல தடவைகள் கோரியிருக்கின்றோம். ஆனால் நியமனம் வழங்கப்பட்டால் இழுத்தடிக்கும் நிலைமைகள் உள்ளது. அதேபோல சுகாதார தொழிலாளர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கேட்டிருக்கிறோம். அதுவும் செய்யப்படாமல் ஏமாற்றப்பட்டு வருகிறோம்.
இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்த போதும் இதற்கான நடவடிக்கைகளை மாநகர சபை செய்து கொடுக்கவில்லை. இதனால் நாங்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
ஆகவே எமது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்கான தீர்வுகளை மாநகரசபை வழங்க வேண்டும். இல்லையேல் தொடர் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்து இருக்கின்றோம்.
இந்த விடயங்கள் தொடர்பில் சபை முதல்வர் உள்ளிட்ட சபையினருக்கு தெரியப்படுத்தியுள்ளோம். ஆகையினால் உரிய நடவடிக்கையை மாநகரசபை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.