இன்று (30) இடம்பெற்ற யாழ் மாவட்ட கொரோனா செயலணி கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளோம். அந்த தீர்மானங்களை பொது மக்கள் கவனத்தில் கொண்டு கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்,
- மாவட்டத்தில் உள்ள அத்தனை வழிபாட்டுதலங்களிலும் வழிபாட்டில் ஈடுபடுகின்ற ஆலய குருக்கள், மதகுருக்கள் தவிர்ந்த ஏனையோர் ஆலயத்துக்குள் செல்வதற்கு தடை.
- அன்னதானம் மற்றும் ஏனைய ஆலய செயற்பாடுகளுக்கும் தடை.
- பொது மக்கள் ஒன்று கூடுகின்ற வர்த்தக நிலையங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, சந்தை மற்றும் ஏனைய வர்த்தக செயற்பாட்டை செய்ய அனுமதி.
- திருமண வீடுகளில், மரண நிகழ்வுகளில் 50 பேருக்கும் மேற்படாமல் பங்கேற்க அனுமதி.
- எந்த நிகழ்வுகளுக்கும் வெளி இடங்களில் இருந்து ஆட்கள் வருவதற்கு தடை.
- முதலாம் திகதியிலிருந்து திருமண நிகழ்வுகளை மண்டபங்களில் நடத்த தடை விதித்து, திருமணம் மற்றும் ஏனைய வீட்டு நிகழ்வுகளை வீட்டில் மட்டும் நடத்த அனுமதி.
- பொதுப் போக்குவரத்து ஆசன ஒதுக்கீட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும். வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் பற்றிய விவரங்களை பெற்று கொள்வது கட்டாயம்.
- அங்காடி வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் தொழில் செய்ய தற்காலிக தடை. ஆயினும் அத்தியாவசிய பொருட்களான மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு விற்பதற்கு அனுமதி.
- விளையாட்டு நிகழ்வுகள் அனைத்துக்கும் மறுத்தல் வரை தடை.
- பொது மக்களுடைய கூட்டங்களை நடத்துவது அல்லது பொது மக்கள் எவ்வகையிலேனும் ஒன்று கூடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
- தரம் 1 இற்கான பாடசாலை அனுமதி நேர்முக பரீட்சைகளை மட்டுப்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகளை பேணி, நடத்த அனுமதி. நேர்முகத் தேர்வின் போது ஒன்று கூடுதல் முற்றாக தடை.
- உணவை வாங்கிச் சென்று வீட்டிலிருந்து உண்ணக்கூடிய வாறான ஏற்பாடுகளை உணவங்கள் செய்ய வேண்டும்.
- தொழிற்சாலைகளில் தொழிலுக்கு செல்பவர்களை கூடுமானவரை தொழிற்சாலைகளில் தங்க வைத்து, தொழில் புரிய ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
“இந்த தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு பொலிஸார் மற்று பாதுகாப்பு படைகளின் உதவிகளை நாங்கள் கோரியுள்ளோம். குறிப்பாக ஒருங்கிணைப்பதற்கான மாவட்ட செயலகத்தில் ஏழு நாட்களும் இயங்கக் கூடிய வகையிலே பிரதேச செயலர்கள் மற்றும் மாவட்ட செயலகத்தை இணைக்க கூடியவாறாக அதனை நடைமுறைப் படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். ஒருங்கிணைப்பு அலுவலகத்தினுடைய தொலைபேசி இலக்கம் “0212225000”.
நாங்கள் கூறுகின்ற நடைமுறைகள் அனைத்தையும் பொதுமக்கள் பின்பற்றுவது இல்லை. கூடுமானவரை அந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எமது கடமையாகும். எனவே தற்போது ஆபத்தான நிலைமை இருப்பதன் காரணமாக அனைவரையும் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறும் கோருகிறோம்” – என்று அரசாங்க அதிபர் தெரிவித்தார்