யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் மற்றும் தொற்றாளர்களுடன் பயணித்தவர்கள் என சுமார் 600 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழில் கொரோனா தொற்று சந்தேகத்திலும் மற்றும் ஏனைய நேரடி மற்றும் மறைமுக தொடர்புகள் காரணமாக சுய தனிமைப்படுத்தப்படுபவர்கள் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் படிப்படியாக தனிமைப் படுத்தலிருந்து சுகாதாரபிரிவினரால் விடுவிக்கப்படுவார்கள்.
தற்போது இந்துக்களின் கந்தசஷ்டி விரதம் இடம்பெறுகின்றமையினால் ஆலயங்களில் ஆலய பூசகர் மற்றும் திருவிழா உபயகாரர் உட்பட ஐவர் மட்டுமே ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்குமாறு சுகாதாரப் பிரிவினரால் ஆலய நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அவ் அறிவுறுத்தலுக்கேற்ப செயற்பட வேண்டும். தொடர்ச்சியாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அநாவசிய பயணங்கள் மற்றும் ஒன்றுகூடுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் – என்றார்.