ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 167-வது படமாக உருவாகும் ‘தர்பார்’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. கதாநாயகியாக நயன்தாரா மற்றும் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன், ஹரிஷ் உத்தமன், ஆனந்தராஜ், ஸ்ரீமன் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். தாதாக்களுக்கும் போலீசுக்கும் நடக்கும் மோதலை மையமாக வைத்து எடுத்துள்ளனர். பெரும்பகுதி படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்துள்ளது. படத்தில் அனிருத் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‘சும்மா கிழி நான்தாண்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு’ என்ற அரசியல் பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
தர்பார் படம் ஜனவரி 15-ந்தேதி பொங்கல் பண்டிகை அன்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.
இந்தநிலையில் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. ”ஒரிஜினலாகவே நான் வில்லன்மா” என்று ரஜினி பேசும் வசனம் டிரைலரில் இடம் பெற்றுள்ளது.டிரைலர் வெளியான சில நிமிடங்களில், சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக தொடங்கியது. வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் ரஜினிகாந்த் ரசிகர்கள் டிரைலர் காட்சிகளை பதிவிட்டு வருகின்றன.