உலகத் தமிழர் பேரவையின் குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், பௌத்த பீடங்களின் பிக்குமாரையும் தொடர்ந்து யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தையும் நல்லை ஆதினத்தையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
புலம்பெயர் தேசத்தில் தமிழர் அமைப்புக்கள் பல இருக்கின்ற போது அவ் அமைப்புக்கள் இடையே ஒரு பொது நிலைப்பாட்டை ஏற்படுத்தாமல் தனித்து உலகத் தமிழர் பேரவை சிங்கள அரசையும் தேரர்களையும் சந்தித்தமை ரணில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு வெள்ளை அடிக்கும் நோக்கமா? என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்துள்ளது என சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இன நல்லிணக்கம் ஏற்படும் வகையில் பிரகடனம் ஒன்றை ஜனாதிபதி ரணிலிடம் வழங்கியதாக செய்திகள் வந்துள்ளன. மிகவும் வேதனையாக உள்ளது ஜனாதிபதியின் நல்லிணக்கம் தமிழர் விவகாரத்தில் இதுவரை எப்படி இருக்கிறது என்று தெரியாது போன்று நடிக்கிறார்களா?
தமிழர்களின் நிலங்களை அபகரித்தல் சிங்கள மயப்படுத்தல் , ஐ.நா மனிதவுரிமைப் பேரவையின் தீர்மானத்தை நிராகரித்தமை, அரசியல் அமைப்பு சபையில் தமிழர் பிரதிநிதியை ஏற்றுக் கொள்ளாமை, அரசியல் அமைப்பில் உள்ள 13 திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த பாராளுமன்றத்தை சாட்டியமை , வடக்கு மீனவர் பிரச்சினையை மேலும் சிக்கலுக்குள் தள்ளுதல், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு நீதியை தட்டிக்கழித்தல், நினைவேந்தல்களில் ஈடுபட்டோரை பயங்கரவாத சட்டத்தல் சிறையில் அடைத்துள்ளமை, தமிழர் தாயகத்தில் இந்திய சீனாவிற்கு இடையில் போட்டியை ஊக்குவித்தல், தமிழர் மீது சிங்கள இனவாதிகள் வீசும் இனவாத கருத்துக்களை கட்டுப்படுத்தாது வேடிக்கை பார்த்தல் போன்ற நடவடிக்கைகள் ஐனாதிபதி ரணிலின் இன நல்லிணக்கமா?
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்த பின்னர் தமிழர் விவகாரத்தில் கடந்த காலங்களைப் போன்றே சந்தர்ப்பவாத வேடம் போட்டு வருகிறார் இது உலகத் தமிழர்களுக்கே புரியும்.
ரணிலின் தந்திரம் தெரிந்து தான் தாயகத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து புதிய அரசியலமைப்பு வருவதற்கு முன்னர் நீங்கள் தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பில் உள்ள 13 வது திருத்தத்தை முழுமையாக அமுழ்ப்படுத்துங்கள் என கோரிக்கை வைத்தனர் இதனை எதிர்பார்க்காத ஜனாதிபதி ரணில் தன்னையே ஏமாற்றும் வகையில் பாராளுமன்றத்தில் ஆதரவைப் பெற வேண்டும் என பொய் உரைத்தது மட்டுமல்லாமல் பொலீஸ் அதிகாரம் தர மாட்டேன் என தான் தான் அரசியலமைப்பை தீர்மானிப்பவர் போல பதில் அளித்தார் இத்தோடு வெளியில் வந்தது ரணில் இனநல்லிக்க தீர்வு நாடகம்.
தற்போது GTF குழுவிற்கு வழமையான பல்லவியை பாடியுள்ளார் ரணில் அதாவது புதிய அரசியலமைப்பு மூலம் தீர்வு தருவதாக இதனை வடிவேல் பாணியில் சொன்னால் வரும் ஆன வராது.
புலம் பெயர் தேசத்தில் உள்ள ஒவ்வொரு அமைப்புக்களும் பெரும் தியாகத்தின் பெயரால் வடிவமைக்கப்பட்டவை அதனை தரம் தாழ்த்தும் வகையில் நடந்து கொண்டால் வரலாறு பதில் சொல்லும் – என குறிப்பிடப்பட்டுள்ளது.