இஸ்ரேல் ராணுவம் ரபா நகர் மீது தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் தொகை அடர்ந்த ரபா நகரில் இருந்து சுமார் 6 லட்சம் மக்கள் முகாமிற்கு இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
ரபா நகர் மீது தாக்குதல் நடத்தினால் ஆயுதம் வழங்கமாட்டோம் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. முழு அளவில் ரபா மீது தரைவழி தாக்குதல் நடத்தக்கூடாது என அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் வலியுறுத்திய நிலையில் இஸ்ரேல், சிறிய அளவிலான வரையறுக்கப்பட்ட தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ரபா மீதான தாக்குதல் தொடரும், கூடுதல் படைகள் ரபா நகருக்குள் நுழையும் என இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி யோவ் காலன்ட் தெரிவித்துள்ளார். மேலும், ரபாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் சுரங்கங்களை அழித்து, 20-க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினரை கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ரபா மீது தாக்குதல் நடத்தப்படும் நிலையில் காசா முனையின் மற்ற பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் ஒன்றிணைந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதாக கூறப்படுகிறது. அப்படி தாக்குதல் நடத்துபவர்களை ஒழித்து கட்டியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் இருந்துக்கு 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் நோக்கி தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.