சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டாக வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது.
சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
இதற்கிடையே, தலைநகர் டமாஸ்கஸ் நேற்று கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆசாத்துக்கு ஆதரவாக செயல்படும் ரஷியாவின் கடற்படை விமான தளங்கள் அமைத்துள்ள கடலோர பகுதிகளுடன் டமாஸ்கஸ் தொடர்பைக் கிளர்ச்சியாளர்கள் துண்டித்துள்ளனர். அதிபர் ஆசாத் நாட்டை விட்டு விமானம் மூலம் தப்பியோடியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து தப்பியோடிய ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஷியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர் என கிரெம்ளின் மாளிகை வட்டாரம் தெரிவிக்கின்றது.
இதுதொடர்பாக ரஷிய செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மாஸ்கோ வந்துள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் ரஷியா அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. சிரியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என எப்போதும் ரஷியா கூறி வருகிறது.
ஐ.நா. மத்தியஸ்தம் செய்யும் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.