உக்ரைன் போர் தொடர்பாக விவாதிப்பதற்காக ‘ஜி 7’ நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் ஜெர்மனியில் நேற்று நடைபெற்றது. அப்போது உக்ரைனில் நடக்கும் போர், ஏழை நாடுகளை அச்சுறுத்தும் உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று ‘ஜி 7’ நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் எச்சரித்தனர்.
இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கிய ஜெர்மனி வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் “உக்ரைனியர்களிடம் உள்ள தானியங்களை வெளியிடுவதற்கான வழிகள் கண்டுபிடிக்கப்படாவிட்டால் வரும் மாதங்களில் சுமார் 5 கோடி மக்கள், குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்தவர்கள் பட்டினியை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், போர் உலகளாவிய நெருக்கடியாக மாறியுள்ளது” என்றார்.
எனவே தானியங்களை உக்ரைனை விட்டு வெளியேற்றுவதற்கான தடைகளை அகற்றுவதற்கு ரஷியாவுக்கு கடுமையான முறையில் அழுத்தம் கொடுக்க வேண்டுமென சர்வதேச சமூகத்தை ‘ஜி 7’ நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
மேலும் சர்வதேச தடைகளை குறைமதிப்புக்கு உட்படுத்துவது அல்லது உக்ரைனில் ரஷியாவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது என எந்த வகையிலும் ரஷியாவுக்கு உதவ வேண்டாம் என சீனாவை ‘ஜி 7’ நாடுகள் கேட்டுக்கொண்டன.