கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் எல்லையில் ரஷியா சுமார் 1½ லட்சம் படை வீரர்களை நிலை நிறுத்தி உள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாகவே இரு நாடுகளின் எல்லையில் கடுமையான போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த சூழலில் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுகான்ஸ்க் மற்றும் டன்ட்ஸ்க் ஆகிய 2 மாகாணங்களையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக ரஷிய அதிபர் புதின் நேற்று அறிவித்தார்.
அதை தொடர்ந்து, அங்கு ரஷிய படைகள் நுழைவதற்கும் புதின் உத்தரவிட்டார். இதனால் அங்கு போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் உக்ரைனுக்குள் ரஷிய படைகள் நுழைய உத்தரவிட்ட அந்த நாட்டின் அதிபர் புதினுக்கு உலக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:-
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன்:-
உக்ரைன் பிரதேசத்தில் இருந்து ரஷியா நிபந்தனையின்றி வெளியேற வேண்டும். மேலும் ரஷிய தனது அண்டை நாடுகளை அச்சுறுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். ரஷியாவின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இத்தகைய நடத்தையை கண்டிக்கும் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகள் ஒன்றிணைவது முக்கியம், மற்ற நாடுகள் ரஷியா மீது வலுவான மற்றும் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கும் தருணத்தில், நாங்கள் அவர்களுடன் இணைந்திருப்போம் என்று நான் உறுதியளிக்கிறேன்.
தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்:-
உக்ரைனின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும். சர்வதேச சமூகத்தின் விருப்பத்துக்கு எதிரான ஒரு ராணுவ மோதல், ஐரோப்பாவின் அரசியல் மற்றும் பொருளாதாரங்களில் மட்டுமல்ல, முழு உலகிலும் பெரும் மாற்றங்களைக் கொண்டுவரும்.
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா:-
உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாட்டை ரஷியா மீறியுள்ளது. புதின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. நாங்கள் எங்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கிறோம். பொருளாதாரத் தடைகள் உட்பட சாத்தியமான கடுமையான நடவடிக்கைகள் மூலம் ரஷியாவுக்கு பதிலடி தரப்படும்.
நியூசிலாந்து வெளியுறவு மந்திரி நனாயா மகுதா:-
உக்ரைன் பிரிவினைவாத பிராந்தியங்களை புதின் அங்கீகரிக்க சர்வதேச சட்டத்தின் கீழ் எந்த அடிப்படையும் இல்லை. இது ஒரு தெளிவான ஆக்கிரமிப்பு செயலாகும். இது, படையெடுப்புக்கு ஒரு சாக்குப்போக்கை உருவாக்குவதற்கான புதினின் திட்டமிட்ட செயல். அமைதியான தீர்வைக் காண அவசர தூதரக முயற்சிகளுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறோம்.
துருக்கி வெளியுறவு மந்திரி மெவ்லூட் கவுசோக்லு:-
ரஷ்யாவின் இந்த முடிவை ஏற்கமுடியாது. நாங்கள் அதை நிராகரிக்கிறோம். வன்மையாக கண்டிக்கிறோம்.
ரஷ்யாவுக்கு ஜேர்மனி எச்சரிக்கை!
ரஷ்யா மனித உயிர்களுடன் விளையாடுவதாக குற்றம் சாட்டியுள்ளது ஜேர்மனி. ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock, ரஷ்யா, உக்ரைனில் வாழும் பொதுமக்களின் உயிர்களுடன் பொறுப்பற்ற முறையில் விளையாடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளதுடன், உடனடியாக அது பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.