உக்ரைனுக்கு எதிராக ரஷியா போர் தொடுத்துள்ள சூழலில் உலக அளவில் அதன் தாக்கம் பெருமளவில் எதிரொலித்துள்ளது. வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளிலும் இந்த போரால் எரிபொருள், உணவு பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தலைதூக்கி உள்ளன. இந்நிலையில், ரஷியாவின் துணை பிரதமர் மற்றும் தொழில்துறை மற்றும் வர்த்தக மந்திரியான டெனிஸ் மான்டுரோவ் இந்தியாவுக்கு நேற்று வருகை தந்தார்.
அவருக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவில் 2 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அவர், இந்தப் பயணத்தின் முதல் நாளில் ரஷியா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் ராஜாங்கபூர்வ ஆணைய கூட்டத்திற்கு (ஐ.ஜி.சி.) ரஷியா சார்பில் தலைமையேற்கிறார்.
அவர் இந்தக் கூட்டத்தில் வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில், ரஷியா துணை பிரதமர் டெனிஸ் மாண்டுரோவ் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார். இரு நாடுகளின் வர்த்தக பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், மாஸ்கோ நம்பகமான வெளிநாட்டு கூட்டாளர்களை நம்பியிருக்கும் என தெரிவித்தார். இன்று நடைபெற உள்ள இரு நாடுகளின் ராஜாங்க அளவிலான ஆணைய கூட்டத்தில் 24-வது ஐ.ஜி.சி. கூட்டம் பற்றி இறுதி முடிவு செய்யப்படுகிறது.