ரஷியாவை சேர்ந்த சைபர்செக்யூரிட்டி நிறுவனம் கேஸ்பர்ஸ்கை-இன் மென்பொருள்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
“கேஸ்பர்ஸ்கை தனது மென்பொருள்களை இனி அமெரிக்காவில் விற்பனை செய்யவோ அல்லது ஏற்கனவே விற்பனை செய்த மென்பொருள்களுக்கு அப்டேட் வழங்கவோ முடியாது,” என்று அமெரிக்க வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
“ரஷிய நிறுவனமான கேஸ்பர்ஸ்கை கொண்டு அமெரிக்காவின் மிக முக்கிய விவரங்களை சேகரிக்கும் பணிகளில் ரஷியா தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. மேலும், அந்நாடு அதற்கான திறன் கொண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் அந்நாட்டு குடிமக்களுக்கு அவர்களது தொழில்நுட்பம் ஆபத்தை ஏற்படுத்தும் எனில் அதற்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்,” என அமெரிக்க வர்த்தகத்துறை செயலாளர் ஜினா ரைமொண்டோ தெரிவித்துள்ளார்.
மென்பொருள் துறையில் பிரபலமாக அறியப்படும் கேஸ்பர்ஸ்கை நிறுவனம் ரஷியாவின் மாஸ்கோவை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் உலகம் முழுக்க 31 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. உலகம் முழக்க 400 மில்லியன் பேரும், 200-க்கும் அதிக நாடுகளில் 2.7 லட்சம் கார்ப்பரேட் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது.