உக்ரைன் கிழக்கில் படைகளை குவித்து வரும் ரஷ்யா, கண்டிப்பாக தாக்குதலை முன்னெடுக்கும் எனவும், அது மிக விரைவில் நடக்கும் எனவும் அச்சம் எழுந்துள்ளது. ரஷ்யாவின் இந்த புதிய நகர்வு, உக்ரைன் கிழக்கை மொத்தமாக அழிக்கும் எனவும், அது மிக விரைவில் நடந்தேறும் எனவும் உக்ரைன் தரப்பில் கூறப்படுகிறது
உக்ரைன் தயார் நிலையில் இருப்பதாக கூறி வந்தாலும், இதுவரை எதிர்கொள்ளாத கடும் பின்னடைவை சந்திப்பார்கள் என்றே கூறப்படுகிறது. ரஷ்யா தயார் நிலையில் இருப்பதாகவும், எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும் அவர்கள் தாக்குதலை முன்னெடுக்கலாம் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள், கிழக்கு உக்ரைன் நோக்கி 8 மைல்கள் தொலைவு இராணுவ கவச வாகனங்களின் அணிவகுப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
மேலும், டான்பாஸ் பகுதியில் பல ஆயிரக்கணக்கில் ரஷ்ய துருப்புகள் குவிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, உக்ரைன் பொதுமக்கள் குறிப்பிட்ட பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் எனவும், அல்லது உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனவும் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், எதிர்வரும் நாட்கள் மிக முக்கியமானது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நாட்டு மக்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார். ரஷ்ய துருப்புகள் மிக பெரிய இராணுவ நடவடிக்கையை நாட்டின் கிழக்கு பகுதியில் முன்னெடுக்க இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக தலைநகர் கீவ்வில் இருந்து மட்டும் புதைக்கப்பட்ட நிலையில் 1,200 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையிலேயே, ரஷ்ய தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.