உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு வழங்கி வரும் ராணுவ ஆதரவை ஈரான் உடனடியாக நிறுத்துமாறு செவ்வாயன்று ஈரானை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ தாக்குதலில் ஈரானின் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
சமீபத்தில் கூட உக்ரைனிய தலைநகர் கீவ்வில் நடத்தப்பட்ட ரஷ்யாவின் ராணுவ தாக்குதலில் ஈரானில் தயாரிக்கப்பட்ட சுமார் 20 ஷாஹெட் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
அத்துடன் ஈரானுக்கான முன்னோடி இல்லாத அளவிலான இராணுவ மற்றும் தொழில்நுட்ப ஆதரவிற்கு ஈடாக “நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை” ஈரானிடம் இருந்து வாங்குவதற்கு மாஸ்கோ விரும்புகிறது என்று பிரித்தானிய உளவுத்துறை தெரிவித்து உள்ளது.
போரில் ரஷ்யாவிற்கு வழங்கப்பட்ட ஈரானிய ட்ரோன்கள் உக்ரைனில் பல உயிர்களை கொன்று குவித்துள்ளது.
இந்நிலையில் செவ்வாயன்று ரஷ்யாவிற்கு வழங்கி வரும் ராணுவ ஆதரவை ஈரான் உடனடியாக நிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் ஈரானை வலியுறுத்தியுள்ளது.
ஈரானிய வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியனுடனான அவசர சந்திப்பின் போது, ரஷ்யாவுக்கான இராணுவ ஆதரவை உடனடியாக நிறுத்துமாறு தெஹ்ரானை ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் வலியுறுத்தியுள்ளார்.