ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைன் போரில் களமிறங்கிய 126 இந்தியர்களில் தற்போது 12 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டுமின்றி, மேலும் 16 பேர்கள் மாயமாகியுள்ளதாகவும், அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது கைது செய்யப்பட்டிருக்கலாம் என்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரகம் உறுதி செய்துள்ளது.
ரஷ்யாவில் சிக்கி போரில் ஈடுபட்டுள்ள அனைத்து இந்தியர்களையும் விடுவித்து திருப்பி அனுப்புவதற்காக ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான தரவுகளின் அடிப்படையில் 126 பேர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து போரிட்டு வந்ததாகவும், அதில் தற்போது வரையில் 96 பேர்கள் நாடு திரும்பியுள்ளதாகவும் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 18 இந்தியர்கள் இன்னும் போரில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த 18 பேரில் 16 பேர்கள் நிலை தொடர்பில் தகவல் இல்லை என்றும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா தரப்பில் இந்த 16 பேர்களையும் மாயமானவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர். வெளியான தகவலின் அடிப்படையில், வேலைவாய்ப்பு என போலியான விளம்பரங்களால் ஈர்க்கபப்ட்டு ரஷ்யாவுக்கு சென்றவர்களை ராணுவத்தில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவுக்கு ஆட்களை அனுப்பியவர்கள் என அடையாளம் காணப்பட்ட நால்வர் இதுவரை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.