ரஷிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டு அதிபர் புதினுக்கு, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிறப்பு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். ரஷிய தினம் 1992 முதல் ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று கொண்டாடப்படுகிறது. ஜூன் 12, 1990 அன்று ரஷிய சோவியத் கூட்டமைப்பு சோசலிஸ்ட் குடியரசின் (ஆர் எஸ் எப் எஸ் ஆர்), மாநில இறையாண்மை பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதை இந்த நாள் நினைவுபடுத்துகிறது.
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள ராணுவ தாக்குதல் 109 நாட்களை எட்டியுள்ள நிலையில், “ரஷிய மக்கள் தங்கள் இலக்குகளை நிறைவேற்றுவதில் பெரும் வெற்றியை அடைந்துள்ளனர்” என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, கொரிய செய்தி நிறுவனம் கூறுகையில், வட கொரிய தலைவர் “ரஷியாவின் மக்களுக்கான அரசாங்கம் மற்றும் ரஷிய குடிமக்களுக்கு, அதன் தேசிய தினத்தில் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தார்” என செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், உக்ரைன் மீதான இந்த இரக்கமற்ற போரை நியாயப்படுத்தும் விதத்திலான அனைத்து காரணங்களையும் கிம் ஜாங் உன் ஆதரித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “ரஷியா தனது நாட்டின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் பாதுகாக்கும் முறைகளை நன்கு அறிந்திருந்தது. இதனால் ரஷியாவால் தனது இலக்கை அடைவதில் பெரும் வெற்றியைப் பெற முடிந்தது. கொரிய மக்கள் ரஷிய மக்களுக்கு முழு ஆதரவையும் ஊக்கத்தையும் அளிக்கின்றனர்.
கொரியா-ரஷியா இடையே நட்புறவு மற்றும் ஒத்துழைப்பிற்கான உறவுகளை நான் வெளிப்படுத்துகிறேன். ஏப்ரல் 2019 இல், விளாடிவோஸ்டாக்கில் நடந்த எங்கள் முதல் சந்திப்பிற்கு பிறகு, இது இருநாட்டு வளர்ச்சியில் புதிய தீவிரமான திருப்பத்தை ஏற்படுத்தியது. நம் இருநாடுகளும், தொடர்ந்து அனைத்து துறைகளிலும் வீரியத்துடன் வலுப்பெறும். உலக பாதுகாப்பை உறுதி செய்யவும், சர்வதேச நீதியைப் பாதுகாப்பதற்கான பயணத்திலும் இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜாங்க ஒத்துழைப்பு நெருக்கமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.