ரஷ்யா – உக்ரைன் விடயத்தில் தவறிழைத்த மேற்குலகம்! அமெரிக்க பேராசிரியர் கருத்து!!

You are currently viewing ரஷ்யா – உக்ரைன் விடயத்தில் தவறிழைத்த மேற்குலகம்! அமெரிக்க பேராசிரியர் கருத்து!!

ரஷ்ய – உக்ரைன் விடயத்தில், ரஷ்யாவை கையாள்வதில் அமெரிக்கா, நேட்டோ உட்பட, மேற்குலகம் தவறிழைத்துள்ளதாக அமெரிக்க பேராசிரியரான, ” Oleg Itskhoki” தெரிவித்துள்ளார். நேட்டோவின் எல்லைகளை ரஷ்யாவின் எல்லைவரை விரிவாக்கும் நோக்கோடு தொடங்கப்பட்ட, அனாவசியமான இப்போரில் மேற்குலகம், தனது குறிக்கோளுக்கு மாறான விதத்தில் பெரும் பொருளாதாரத்தை இப்போரில் செலவிடுவதாக மேற்படி பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

சோவியத்தின் வீழ்ச்சிக்குப்பின், அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒத்துக்கொண்டதன்படி, ரஷ்ய எல்லைகள் வரை நேட்டோ விரிவாக்கம் தொடரக்கூடாது என அன்று ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை, கடந்த 25 வருட காலப்பகுதியில்  நேட்டோ 14 தடவைகள் மீறியுள்ள நிலையில், ரஷ்ய எல்லையிலுள்ள உக்ரைனுக்குள் தனது விரிவாக்கத்தை செய்ய முற்பட்டபோது, ரஷ்யாவும் எதிர்வினையாற்ற வேண்டிய நிலையில், உக்ரைன்மீது இராணுவ நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டது. இந்நிலையில், இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ரஷ்யாவை பலவீனப்படுத்தி, போரிலிருந்து பின்வாங்க வைப்பதற்காக பலவிதமான தடைகளை ரஷ்யா மீது விதித்தது மேற்குலகம்.

இத்தடைகளில் குறிப்பாக ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத்தடைகள், தொடக்கத்தில் ரஷ்யாவை ஆட்டங்காண வைத்திருந்தாலும், மூன்றே மாதங்களில் ரஷ்யா பொருளாதாரத்தில் மீண்டும் தலைதூக்கியிருக்கிறது என்கிறார் அமெரிக்க பேராசிரியர். பொருளாதாரத்தடைகளை விதித்த மேற்குலக நாடுகள், தமது எண்ணெய் தேவைகளுக்காக பெரும்பாலும் ரஷ்யாவை தங்கியிருப்பதால், பொருளாதாரத்தடைகளை விதித்திருந்தாலும், தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து இந்நாடுகள் எண்ணெய் இறக்குமதியை தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. தவிரவும், ரஷ்யாவிடமிருந்து எவ்விதமான நுகர்வுப்பொருட்களையும் இறக்குமதி செய்யக்கூடாது என்ற பொதுவான பொருளாதாரத்தடை அறிவிக்கப்பட்டதிலிருந்து எண்ணெய் விலையும் அதிகரித்திருந்தது. இந்நிலையில், தொடர்ச்சியாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவை மேற்குலக நாடுகள் தொடர்ந்ததாலும், சந்தையில் எண்ணெய்க்கான விலை அதிகரித்திருந்ததாலும் ரஷ்யா அபரிமிதமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக அமெரிக்க பேராசிரியர் குறிப்பிடுகிறார்.

போர் ஆரம்பமானவுடன், மேற்குலகம் விதித்த பொருளாதாரத்தடையால் சுமார் 300 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ரஷ்யாவின் பணம், தடுத்து வைக்கப்பட்ட நிலையில், பெரும் பொருளாதார சிக்கலுக்கு உள்ளான ரஷ்யா, வெறும் மூன்றே மாதங்களில் எண்ணெய் ஏற்றுமதி மூலமாக 300 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணத்தை சம்பாதித்துள்ளதாகவும், மேற்குலக நாடுகளுக்கு உயர்விலையில் எண்ணெய் விற்ற ரஷ்யா, தனது நட்பு நாடுகளான சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சகாய விலையில் எண்ணெய் ஏற்றுமதி செய்வதாலும், மேற்குலக நாடுகளிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடையுள்ளதால், சீனாவிடமிருந்து அதிகளவில் வாகனங்களை இறக்குமதி செய்வதாலும், ஆசியாவில் தனக்கென நிரந்தர சந்தையை ரஷ்யா உருவாக்குவதற்கு மேற்குலக நாடுகளின் பொருளாதாரத்தடைகள் வழிவகுத்து கொடுத்துள்ளதாகவும் பேராசிரியர் குற்றம் சாட்டுகிறார்.

ரஷ்ய – உக்ரைன் முறுகல் ஆரம்பித்தவுடனேயே, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதிக்கான நூறு சதவிகித முற்றான தடையை மேற்குலகம் விதித்திருந்தால், ரஷ்யாவை மேற்குலகம் தன் விருப்பப்படி கையாண்டிருக்க முடியுமெனவும் கூறும் அமெரிக்க பேராசிரியர், எனினும், ரஷ்ய எண்ணெய் இல்லாமல் நடுத்தெருவில் நிற்க விரும்பாத மேற்குலக நாடுகள், ரஷ்யா மீது தாங்கள் விதித்த பொருளாதார / இறக்குமதி தடைகள், மாற்றப்படக்கூடியதும், ஏதாவது திருகுதாளம் செய்து ரஷ்யாவிடமிருந்து இறக்குமதியை தொடரக்கூடிய விதத்திலேயே தங்களது பொருளாதார தடைகளை இறுக்கமானதாக இல்லாமல் வடிவமைத்துள்ளமையால், ரஷ்யாவை அடிபணியவைக்கும் முயற்சியில் தோல்வியே காணப்பட்டிருக்கிறது எனவும் குறிப்பிடுகிறார். ரஷ்யா தொடர்பான தமது கையாள்கையில் தவறான அணுகுமுறையில் அதீத நம்பிக்கை வைத்த அமெரிக்கா, நேட்டோ மற்றும் மேற்குலக நாடுகள், தாமாக தொடங்கிய போருக்கு தாமே பெரும் நிதியுதவி அளிக்கும் இக்கட்டான நிலைக்குள் சிக்கியிருப்பதால், மேற்குலகத்தின் பொருளாதார சரிவின் பின்விளைவுகளை ஒவ்வொரு மேற்குலக குடிமகனும் உணர ஆரம்பித்துள்ள நிலையில், மேற்குலக நாடுகளின் அரசுகள் மீது அந்தந்த நாடுகளின் மக்கள் வசனமடையவும் ஆரம்பித்துள்ளனர். உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டிய நிலையிலும், பெரும் பொருளாதாரத்தை அள்ளிக்கொடுக்க வேண்டிய இருதலைக்கொள்ளிகளாக அமெரிக்கா, நேட்டோ மற்றும் மேற்குலக நாடுகள் மாறியுள்ளன.

தமது நாடுகளின் பொருளாதார உறுதித்தன்மை ஆட்டம் காணும் இந்நிலையில், ரஷ்ய – உக்ரைன் போரை எப்படியாவது நிறைவுக்கு கொண்டுவரவே மேற்குலகம் விரும்புகிறது என்பதும் வெளிப்படையாக தெரிவிக்கப்படும் நிலையில்,  நேட்டோ கூட்டமைப்பின் உயர்மட்ட குழுவிற்கு தலைமை வகிக்கும் நோர்வே நாட்டவரான “Stian Jenssen” கூறிய கருத்தொன்று, உக்ரைனிய அதிபரை கோபம்கொள்ள வைத்திருக்கிறது. அதாவது, ரஷ்யாவுடனான முறுகலை நிறைவுக்கு கொண்டுவந்து ரஷ்யாவுடன் சமாதானமான உறவுகளை தொடரும் பொருட்டு, ரஷ்யாவுடன் பேசி, உக்ரைனின் சில நிலப்பரப்புக்களை ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுப்பது பற்றி உக்ரைன் சிந்திக்க வேண்டும் எனவும், இவ்வாறான தீர்வொன்றுக்கு உக்ரைன் முன்வந்தால், நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இலகுவில் அங்கத்துவத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் “Stian Jenssen” குறிப்பிட்டுள்ளார். இதுவே உக்ரைனிய அதிபரை சீற்றத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

ரஷ்ய – உக்ரைன் முறுகலை உண்டாக்கி, இன்று தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொண்டுள்ள மேற்குலகம், போரை விரைந்து முடித்து வைக்கவே விரும்புகிறது என்பதற்கு, நேட்டோ கூட்டமைப்பின் உயர்மட்டக்குழுவின் தலைவரான “Stian Jenssen” தெரிவித்துள்ள கருத்து, சமீபத்திய சான்று.

 

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply