ரஷ்யாவின் சுகாதார அமைச்சகம் புற்றுநோயை எதிர்கொள்ளும் ஒரு புதிய தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசி 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் சுகாதார அமைச்சகத்தின் Radiology Medical Research Center தலைவர் அண்ட்ரே காப்ரின் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த தடுப்பூசி பொதுமக்களுக்கு நோய்களை தடுக்க வழங்கப்படுவதில்லை; அதற்குப் பதிலாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையாக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட நோயாளிகளுக்கேற்ப இந்த தடுப்பூசி உருவாக்கப்படும், இது மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்படும் தனிப்பட்ட புற்றுநோய் தடுப்பூசிகளுக்கு ஒப்பாக இருக்கும்.
RNA தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு நோயாளியின் புற்றுநோயின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு தடுப்பூசி தயாரிக்கப்படும்.
தடுப்பூசி எந்த வகையான புற்றுநோய்களை எதிர்கொள்கிறது, அதன் செயல்திறன் எவ்வளவு என்பது குறித்து மேலும் விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
இந்த தடுப்பூசி, புற்றுநோயின் செல்களில் உள்ள ஆன்டிஜென்களை (antigens) அடையாளம் கண்டு, அவற்றை அழிக்க நோய் எதிர்ப்பு அமைப்பை பயிற்றுவிக்கிறது.
இதுபோன்ற தொழில்நுட்பம் பிரித்தானியா மற்றும் அமெரிக்காவிலும் பரிசோதிக்கப்படுகிறது.
உலக அளவில் புற்றுநோய் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யாவிலும் 2022-ஆம் ஆண்டில் மட்டும் 6,35,000 புற்றுநோய் வழக்குகள் பதிவாகியுள்ளன.
மேலும், பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் புற்றுநோய் தடுப்பூசிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, முதன்முறையாக நம்பகமான முடிவுகளை அளிக்கத் தொடங்கியுள்ளன.
ரஷியாவின் இந்த அறிவிப்பு உலகளாவிய புற்றுநோய் சிகிச்சைத் துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.