ரஷ்யா மீது சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!!

You are currently viewing ரஷ்யா மீது சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!!

உக்ரைன் மீதான தனது படை நடவடிக்கைகளை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டுமென சர்வதேச நீதிமன்றம் (ICJ) தீர்ப்பளித்துள்ளது.

1948 ஆண்டில் வரையப்பட்ட, இனப்படுகொலைக்கெதிரான விதந்துரைகளை மீறும் விதத்தில், தனது படை நடவடிக்கைகள்மூலம், கிழக்கு உக்ரைனின் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு ரஷ்யா காரணமாக இருக்கிறது என்பதன் அடிப்படையில், சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் தொடர்ந்திருந்த வழக்கு துரிதமாக விசாரிக்கப்பட்டதன் பின் இன்று இத்தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்படி வழக்கின் முடிவில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் தீர்ப்புக்கு ஆதரவாக 13 நீதிபதிகளும், எதிராக இரு நீதிபதிகளும் வாக்களித்ததாகவும், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் நீதிபதிகளே எதிர்த்து வாக்களித்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி தீர்ப்பானது தமக்கு கிடைத்த முதல் வெற்றியென, உக்ரைனிய அதிபர் தெரிவித்துள்ளார்.

மேற்படி நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பை ரஷ்யாவிடம் சேர்ப்பதை தாண்டி, அத்தீர்ப்பு நடைமுறைப்படுத்துவதை எவ்விதத்திலும் உறுதி செய்யும் வல்லமை மேற்படி நீதிமன்றத்துக்கு கிடையாதென தெரிவிக்கப்படும் அதேவேளை, தீர்ப்பை ரஷ்யா நடைமுறைப்படுத்தாவிடில் குறித்த தீர்ப்பு ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்புச்சபைக்கு பாரப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், பாதுகாப்புச்சபையில் இத்தீர்ப்பு மீதான விவாதம் நடைபெறுமானால், அதனை தனது “வீட்டோ” அதிகாரம் மூலம் ரஷ்யா தடுத்து நிறுத்ததும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், இத்தீர்ப்பினால் உடனடியான பலனேதும் இருக்காதென கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply