நோர்வேயிலும், ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் இருக்கக்கூடிய, ரஷ்ய ஆதரவுக்குழுக்கள், அந்தந்த நாடுகளில், ரஷ்யாவுக்கு ஆதரவாக தாக்குதல்களை நடத்தலாமெனவும் எனவே, இவ்வாறு அடையாளம் காணப்பட்ட குழுக்கள் மீது தொடர்ச்சியாக கண்காணிப்பை வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஸ்பெய்ன் நாட்டை உலுக்கிய தபால் குண்டுகள், ரஷ்ய உளவுத்துறையின் அறிவுறுத்தலின்படியே நடத்தப்பட்டதாக, அமெரிக்க உளவுத்தகவல்கள் தெரிவிப்பதாக குறிப்பிடும் “New York Times” பத்திரிகை, Russian Imperial Movement” எனப்படும் ரஷ்ய ஆதரவு அமைப்பே இதன் பின்னணியில் இருந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது. ஸ்பெய்ன் தாக்குதல்கள் மூலம் ஐரோப்பாவுக்கு ரஷ்யா மறைமுகமான செய்தியொன்றை விடுத்துள்ளதாகவே இதனை எடுத்துக்கொள்ள வேண்டும் எனக்குறிப்பிடும் மேற்படி பதித்திரிகை, உக்ரைன் விடயத்தில் உக்ரைனுக்கு பக்கபலமாக நிற்கும் அனைத்து நாடுகளும் ரஷ்யாவின் எதிரிகளாகவே பார்க்கப்படுவார்களென ரஷ்யா குறிப்பிட்டுள்ள நிலையில், இவ்வாறான ரஷ்ய ஆதரவுக்குழுக்கள், உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நாடுகளில் தாக்குதல்களை நடத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிடுகிறது.
ரஷ்ய உளவுத்துறையின் நேரடி அறிவுறுத்தலுக்கமைய இக்குழுக்கள் தாம் நிலைகொண்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல்களை நடத்துவது தவிர்க்க முடியாததொன்று எனக்குறிப்பிடும் நோர்வே சிறப்பு குற்றத்தடுப்புப்பிரிவு, எனவே இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட குழுக்களின் மீது தொடர்ச்சியான கண்காணிப்புக்களை வைத்திருக்க வேண்டும் என கருத்துரைத்துள்ளது.