ரஷ்ய – உக்ரைனிய பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை தருமா…

You are currently viewing ரஷ்ய – உக்ரைனிய பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை தருமா…

“பெலாரஸ்” இல் இன்று நடைபெற்ற ரஷ்ய – உக்ரைனிய தூதுக்குழுக்களுக்கு இடையிலான சமாதான பேச்சு வார்த்தைகள் எவ்விதமான முன்னேற்றங்களும் எட்டப்படாமலேயே நிறைவு கண்டுள்ள நிலையில், இத்தூதுக்குழுவினர் மீண்டும் சந்தித்து பேசுவதாக முடிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியான போர்நிறுத்தம் அறிவிக்கப்படுவதோடு, ரஷ்யப்படைகள் உக்ரைனிலிருந்து திரும்பப்பெறப்பட வேண்டும் என்பதே உக்ரைனின் வேண்டுகோள்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவுடன் பேச்சுக்களுக்கு விரும்புவதாக முன்னதாக உக்ரைனிய அதிபர் “ஷெலென்ஸ்கி”, பேச்சுக்களை “பெலாரஸ்” இல் வைத்து நடத்தலாமென்ற ரஷ்யாவின் யோசனையை நிராகரித்திருந்தாராயினும், ரஷ்யா விரும்பியபடியே “பெலாரஸ்” இலேயே இன்றைய பேச்சு வார்த்தைகள் நடந்தேறியுள்ளன. பேச்சு வார்த்தைகளுக்கு முதலில் அழைப்பு விடுத்த உக்ரைனிய அதிபர், ரஷ்யா பேச்சுக்களுக்கு சம்மதம் தெரிவித்ததும், பேச்சுக்களில் நல்ல தீர்வு வருமென்று தான் நம்பவில்லையென்று பேச்சுக்கள் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே நம்பிக்கையீனமாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, “பெலாரஸ்” இல் பேச்சுக்கள் நடந்த அதேவேளையில் ரஷ்ய அதிபருக்கும், பிரான்ஸ் அதிபருக்கும் இடையில் உரையாடலொன்றும் நடைபெற்றுள்ளது. இருவருக்குமான உரையாடலில், உக்ரைனிய பொதுமக்களின் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட ஆவன செய்யவேண்டும் / பொதுமக்களின் பயன்பாட்டுக்கான கட்டமைப்புக்கள் பாதுகாக்கப்பட ஆவன செய்யவேண்டும் / உக்ரைனிய தலைநகர் “கியெவ்” இலிருந்து வெளியேறும், மற்றும் உள்நுழையும் பிரதான வீதி பாதுகாக்கப்பட ஆவன செய்யவேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை பிரான்ஸ் அதிபர், ரஷ்ய அதிபரிடம் விடுத்துள்ளதாகவும், கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கு ரஷ்ய அதிபர் இணங்கியுள்ளதாகவும் பிரான்ஸ் அதிபரின் வட்டாரங்களால் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யா தொடர்பில் உக்ரைன் நடுநிலைத்தன்மையோடு (அதாவது நேட்டோவில் இணைவதை கைவிடுவது) இருக்கவேண்டும் எனவும், அதேவேளை, உக்ரைன் தனது ஆயுதபலத்தை குறைத்துக்கொள்ளவும் வேண்டும் எனவும், உக்ரைனின் ஆளுமையின்கீழிருந்து, 2014 இல் ரஷ்யா தனது ஆளுமைக்குக்கீழ் கொண்டுவந்த “கிரிமியா” தீவை, ரஷ்யாவின் பிரதேசமென உக்ரைன் அறிவிக்க வேண்டுமெனவும் பிரான்ஸ் அதிபரிடம் தெரிவித்த ரஷ்ய அதிபர், போரை முடிவுக்கு கொண்டுவரும் துருப்புசீட்டுகள் இவையே எனவும் வலியுறுத்தியுள்ளதாகவும், “AFP” செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரஷ்ய – பிரான்ஸ் அதிபர்களுக்கிடையே இன்று நடைபெற்ற ஒன்றரை மணிநேர பேச்சுக்களையடுத்து இரு அதிபர்களும் மீண்டும் பேசவுள்ளதாகவும் வெளிவந்துள்ள செய்திகள், பேச்சுக்கள் மூலம் பெரும் அணுவாயுதப்போரொன்று தவிர்க்கப்படுவதற்கான முயற்சிகள் முழுவேகத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளதை கோடி காட்டி நிற்கின்றன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply