ட்ரம்ப்-ஸெலன்ஸ்கி இடையேயான கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்த திட்டத்தை வகுப்பதென லண்டனில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை சந்தித்து பேச இருப்பதாக இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் ஆகியோருடன் ஸெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், பிரான்ஸ், இங்கிலாந்து இணைந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை தயார் செய்வது எனவும், அதை வைத்து ட்ரம்புடன் ஆலோசிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் ட்ரம்புடனான மோதல் நடந்த உடனேயே உக்ரைன் ஜனாதிபதிக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் ஒட்டுமொத்த ஆதரவு தெரிவித்தன. எக்காரணத்தைக் கொண்டும் உக்ரைனை ரஷ்யா கைப்பற்றுவதை ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை.
எனவே, உக்ரைன் விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்க நேற்று (02) உடனடியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் அடங்கிய உச்சி மாநாடு லண்டனில் நடத்தப்பட்டது.
இதில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல், இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி, இத்தாலி பிரதமர் மெலோனி மற்றும் கனடா, ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், பின்லாந்து, போலாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா, நேட்டோ செயலாளர் மார்க் ரூட்டே, துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹகன் பிதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் உரையாற்றிய இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர்,
‘‘உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்படுவது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிற நாடுகளின் பாதுகாப்பிற்கும் இன்றியமையாதது. இதற்காக தலைமுறையில் நிகழும் மகத்தான ஒற்றை நிகழ்வை நோக்கி நாம் முன்னேற வேண்டும். பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் பிற நாடுகள் உக்ரைனுடன் இணைந்து போர் நிறுத்த திட்டத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம். இந்த திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் எடுத்து சென்று ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
இதையடுத்து, ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டம் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக துணை நிற்பதாகவும், வேண்டிய உதவிகளை செய்வதாகவும் வாக்குறுதி அளித்தன. இறுதியாக, போர் நிறுத்த திட்டத்தை வகுப்பதென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.