ரஷ்ய உளவாளிகளுக்கு உதவினார்! இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நோர்வேயில் கைது!!

You are currently viewing ரஷ்ய உளவாளிகளுக்கு உதவினார்! இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நோர்வேயில் கைது!!

ரஷ்ய உளவாளிகளுக்கு நோர்வேயின் அரச இரகசியத்தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில், நோர்வே குடியுரிமை பெற்ற, இந்திய வம்சாவளியை சேர்ந்த “Harsharn Singh Tathgar” என்ற 50 அகவையுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நோர்வேயின் புகழ்பெற்ற தொழிநுட்ப பல்கலைக்கழகமான “NTNU” இல், “மக்னீசியம்” உலோகம் தொடர்பான நுண்ணறிவில் கலாநிதி பட்டம் பெற்ற மேற்படி நபர், பின்னதாக நோர்வேயின் தொழிநுட்ப நிறுவனமான “Veritas” இல் ஆராய்ச்சியாளராக பணியிலிருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

15.08.2020 அன்று உணவகமொன்றில் வைத்து கைது செய்யப்பட்ட மேற்படி நபர், “அரச இரகசியம்” என்ற வரைமுறைக்குள் அடங்கக்கூடிய தகவல்களை ரஷ்ய உளவாளியொருவருக்கு வழங்கியதாகவும், அதற்கு பிரதியுபகாரமாக குறிப்பிட்ட தொகை பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரஷ்ய உளவாளிகளுக்கு தான் வழங்கிய தகவல்கள் நோர்வே அரசுக்கு எவ்விதத்திலும் குந்தகம் விளைவிக்காதென குற்றம் சாட்டப்பட்ட நபர் கருதினாலும், அவர் ரஷ்ய உளவாளிகளுடன் தொடர்புகளை பேணியுள்ளது கடுமையான குற்றமென நோர்வேயின் உளவுத்துறை தெரிவித்துள்ளதால், முதற்கட்டமாக குறிப்பிட்ட நபர் 4 வாரங்களுக்கு தனிமைச்சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் குற்றம் சட்டப்பட்டுள்ளவருக்கு 15 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

19.08.2020 செய்தி மேம்பாடு:

நோர்வேயில் புதிய உளவாளியொருவரை ரஷ்ய உளவுத்துறை பணியிலமர்த்தியதாக 2018 ஆம் ஆண்டில் நோர்வே உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தற்போது கைதுசெய்யப்பட்ட நபரை 2018 ஆமி ஆண்டிலிருந்தே நோர்வே உளவுத்துறை கண்காணித்து வந்ததாக இன்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பகிர்ந்துகொள்ள