ரஷ்ய எதிா்க்கட்சித் தலைவரும் அதிபர் விளாடிமீர் புடினை கடுமையக எதிர்த்து வந்தவருமான அலெக்ஸி நவால்னியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய 400-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அலெக்ஸி நவால்னியின் (47) மரணம் ஒரு படுகொலை என்று அவரது செய்தித் தொடா்பாளா் கீா் யாா்மிஷ் சனிக்கிழமை தெரிவித்திருந்தாா்.
மேலும், அவரின் உடலை வழங்குவதற்கு அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில், நவால்னியின் உடல் அவரின் குடும்பத்திற்கு எப்போது ஒப்படைக்கப்படும் என்பது குறித்தும் உறுதியான தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
அத்துடன், நவால்னியின் மறைவுக்கு ரஷ்யாவின் பல நகரங்களில் உள்ள நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன.
அதன்போது, குறித்த நிகழ்வுகளில் பங்கேற்ற 400 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.