1991ம் ஆண்டுக்கு பிறகு மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோ, எஸ்டோனியாவில் தங்களது மிகப்பெரிய ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளது. பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய இரண்டு நார்டிக் நாடுகளும் நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைவது தொடர்பான தங்களது இறுதி முடிவை தெரிவித்து இருக்கும் நிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய போரானது பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்கும் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புடின் தெரிவித்த கருத்தில், பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளுடன் ரஷ்யாவிற்கு எத்தகைய பிரச்சனைகளும் இல்லை ஆனால் ரஷ்ய எல்லைக்கு அருகில் நடத்தப்படும் ராணுவ விரிவாக்கம் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தும் என எச்சரித்து இருந்தார்.
இந்தநிலையில், வடக்கு ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவில் 1991ம் ஆண்டுக்கு பிறகு ”Hedgehog” என்ற பெயரில் மிகப்பெரிய ராணுவ பயிற்சியை நோட்டோ ராணுவ கூட்டமைப்பு வீரர்கள் தொடங்கியுள்ளனர்.
சுமார் 15,000 வீரர்கள் வரை பங்கேற்றுள்ள இந்த ராணுவ பயிற்சியானது, ரஷ்யா உக்ரைன் போருக்கு முன்னரே திட்டமிடப்பட்டது என்றும், இது ஜூன் 3ம் திகதி வரை மேற்க்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நோட்டோ படைகளின் தயார் நிலை மற்றும் இயங்குதன்மைமை மேம்படுத்துவதே இந்த பயிற்சியின் நோக்கம் என நோட்டோ விளக்கம் அளித்துள்ளது.
நோட்டோ ராணுவ அமைப்பின் இந்த ராணுவ பயிற்சியில், பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளும் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்டோனியாவில் நடைப்பெறும் இந்த போர் பயிற்சியானது ரஷ்ய ராணுவ தளங்களில் இருந்து வெறும் 64 கிலோ மீட்டர் தொலைவிலேயே நடைப்பெறுவதால், எஸ்டோனியாவை ரஷ்ய படைகள் தாக்குவதற்கான வாய்ப்பை தூண்டலாம் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.