ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து போரிட இருப்பதாக பெலாரஸ் அறிவித்துள்ளதை அடுத்து, அந்த நாட்டில் இருந்து உடனடியாக வெளியேற போலந்து மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர், திங்களன்று 83 ஏவுகணைகளை வீசி உக்கிர தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்தது. உக்ரைனின் மின்சார அமைப்புகள், ராணுவ முகாம் உள்ளிட்டவைகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏவுகணை தாக்குதலானது பொதுமக்கள் குடியிருப்பு வளாகங்கள் மீது நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 19 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், டசின் கணக்கானோர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பெலாரஸ் ஜனாதிபதி Lukashenko தெரிவிக்கையில், தமது நாட்டின் சிறப்பு ராணுவம் உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக கலந்துகொள்ளும் எனவும், உக்ரைன் எல்லையில் குவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போலந்து மற்றும் லிதுவேனியா நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தொடர்ந்து தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனையடுத்து, பெலாரசில் தங்கியுள்ள போலந்து மக்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் விடுத்துள்ளது.
பெலாரஸ் அகதிகள் பிரச்சனையை தங்கள் எல்லையில் உருவாக்குவதாக 2021ல் இருந்தே போலந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கவும், போலந்து மற்றும் பெலாரஸ் நாடுகளின் உறவில் மேலும் விரிசல் கண்டது.
முன்னதாக ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி Dmitry Medvedev தெரிவிக்கையில், ரஷ்யா மற்றும் உலக நாடுகளின் அமைதிக்கு உக்ரைன் தொடர்ந்து குந்தகம் விளைவித்து வருவதாக எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், உக்ரைனின் ஆட்சிக்கு முடிவு கட்டினால் மட்டுமே அப்பகுதியில் அமைதி ஏற்படும் எனவும், ரஷ்யா அதற்கான திட்டங்களை தீட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.