இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து ராஜபக்ச அரசாங்கம் செயற்படுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.
மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதனை வெளிவிவகார அமைச்சு விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் அவருக்கான தமது ஆதரவை வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து அம்பிகா சற்குணநாதன் உரையாற்றியதை அடுத்து, அவரை கடுமையாக விமர்சித்து இலங்கை அரசாங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
இந்த அறிக்கையானது , துன்புறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும் சமமானது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட எட்டு மனித உரிமைக் குழுக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் அறிக்கையானது, துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் போன்ற செயலை தெளிவாகக் கொண்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமைப் பாதுகாவலர்களை அச்சுறுத்தும் இலங்கை அரசாங்கத்தின் தந்திரோபாயங்களை கண்டிப்பதாகவும் சர்வதேச மனித உரிமை குழுக்கள் கூறியுள்ளன.
மேலும் நன்கு அறியப்பட்ட, மதிப்புமிக்க மற்றும் தைரியமான மனித உரிமைப் பாதுகாவலரான அம்பிகா சற்குணநாதன், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து துல்லியமான சாட்சியத்தை வழங்கியமைக்காக அவரை இலக்கு வைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அந்தக் குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.