“நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள ராஜபக்ச அரசுடன் மோதும் பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரம் கிடையாது.
ஐக்கிய மக்கள் சக்தியினர் மற்றும் ஏனைய தரப்பினர்கள் அனைவரும் ஒன்றணைந்து அரசுக்கு எதிராகப் போராட வேண்டும்.” என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் “தற்போது பிரதான இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும்போது பிற தரப்பினருடன் மோதி நேரத்தை வீணடிப்பது பயனற்றதாகும். நடைமுறையில் நாடு எதிர்கொண்டுள்ள சவால்களில் இருந்து நாட்டு மக்களை மீட்க வேண்டுமாயின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து அரசுடன் மோத வேண்டும்.
தேசிய பொருளாதாரம், ஜனநாயகம் ஆகியவை பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. இந்த நெருக்கடிகளிலிருந்து நாட்டையும் மக்களையும் நாம் காப்பாற்ற வேண்டும்” – என்றார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன எனறும் அவர் மேலும் குறிப்பிட்டார்.