பிரித்தானியாவின் லண்டன் நகரில் புதியவகை “கொரோனா” வைரஸ் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், லண்டன் நகரம் உட்பட, நாட்டின் தென்கிழக்கு பகுதிகள் சிலவும், கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், லண்டன் நகரம் 16.12.2020 முதல் முடக்கப்படுவதாகவும், பிரித்தானிய சுகாதாரத்துறை அமைச்சரான “Matt Hancock” தெரிவித்துள்ளார்.
லண்டன் நகரில் அவதானிக்கப்பட்டுள்ள புதியவகை “கொரோனா” வைரஸ், நகரின் 60 இடங்களில் அவதானிக்கப்பட்டுள்ளதாக “Sky News” செய்தியூடகம் தெரிவித்துள்ளதாகவும், இப்புதியவகை வைரஸ், முன்னைய வைரஸை விடவும் மிக வேகமாக பரவி வருவதோடு, இதுவரை 1000 பேரை பாதித்துள்ளதாகவும், எல்லா வயதினரிடையேயும் இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
முதன்முதலில் அவதானிக்கப்பட்ட “கொரோனா” வைரஸ் கிருமிகள், தம்மைத்தாமே காலத்துக்கு காலம் உருமாற்றி, புதிய வடிவங்களையும், வேறுபட்ட வீரியங்ளையும் எடுக்கக்கூடியவை என முன்பே அறிவிக்கப்பட்டிருப்பதும், நோர்வேயிலும், “கொரோனா” வைரஸின் மற்றுமொரு புதிய வடிவம் அவதானிக்கப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.