உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என கருதப்படும் லண்டன் ஹீ்த்ரு விமான நிலையம், அருகேயுள்ள மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, மூடப்பட்டது.
உலகின் முன்னணி விமான நிலையங்களில் ஒன்றாக கருதப்படுவது லண்டன் ஹீத்ரு விமான நிலையம். நாள்தோறும் ஆயிரக்கணக்கான விமானங்கள், லட்சக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த விமான நிலையத்துக்கு மின்வினியோகம் வழங்கும் மின் நிலையத்தில் நேற்று இரவு கடுமையான தீ விபத்து ஏற்பட்டது.
விமான நிலையத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இந்த மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்த, பத்து தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் 70 தீயணைக்கும் வீரர்கள் போராடி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்று வட்டார பகுதிகளில் வசித்த 150 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்து காரணமாக விமான நிலையத்துக்கும், சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 16 ஆயிரம் வீடுகளுக்கும் மின்விநியோகம் செய்வது முற்றிலும் தடைப்பட்டது. பற்றி எரியும் தீ காரணமாக, சுற்றுவட்டார பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. அங்கு வசிப்பவர்கள் யாரும் கதவு ஜன்னல்களை திறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேறு வழியில்லாத சூழலில் பயணிகள் பாதுகாப்பு கருதி, செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்தது. இப்போதைக்கு ஒரு நாள் மட்டுமே செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படும் என்றும், சூழ்நிலையை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
விமான நிலையம் திறக்கப்படும் வரை பயணிகள் யாரும் வரக்கூடாது என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு மட்டும் இந்த விமான நிலையம் வழியாக 8.3 கோடி பயணிகள் வந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.