லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவுஸ்திரேலிய குடிமகன் பலி!

You are currently viewing லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவுஸ்திரேலிய குடிமகன் பலி!

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவுஸ்திரேலிய குடிமகனுடன் சேர்த்து மூன்று பேர் கொல்லப்பட்டனர். லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இஸ்ரேல்-காசா போர் தொடங்கியதில் இருந்தே துப்பாக்கிச்சூடு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தெற்கு லெபனான் எல்லைப்பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

பின்ட் ஜபெய்ல் (Bint Jbeil) நகரில் உள்ள ஒரு வீட்டை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக லெபனான் ஆயுதக்குழு கூறியுள்ளது.

மேலும் பலியானவர்கள் குறித்து தேசிய செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், மூவரும் அலி பாஸி, அவரது சகோதரர் இப்ராஹிம் மற்றும் ஷூரூக் ஹம்மூத் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதில் இப்ராஹிம் பாஸி ஒரு அவுஸ்திரேலிய குடிமகன் என்றும், அவர் ஒரு வாரத்திற்கு முன்பு லெபனான் வந்திருந்தார் என்றும் AFP ஊடகத்திடம் உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் பலியான அலி பாஸி தமது போராளிகளில் ஒருவர் என ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதால் அவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்ததுடன், இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி அழுதனர்.

இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையேயான சமீபத்திய வன்முறைகள் பெரும்பாலும் எல்லைப் பகுதியில் மட்டுமே உள்ளது.

ஆனாலும், லெபனான் எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. போர் தொடங்கியதில் இருந்து லெபனான் தரப்பில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் ஹிஸ்புல்லா போராளிகள். ஆனால் ஒரு டசனுக்கும் அதிகமானோர் பொதுமக்கள் மற்றும் மூவர் பத்திரிகையாளர்கள் ஆவர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply