லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர், கடற்கரும்புலி மேஜர் றோசா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்! இன்றைய விடுதலை தீபங்கள்!
21.10.2001 அன்று முல்லைக் கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறீலங்கா கடற்படையினரின் அதிவேக தாக்குதல் “டோறா” பீரங்கி கடற்கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் றோசா ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
இதே கடற்சமரில் கடலிலே காவியம் படைத்த கடற்புலி மாவீரர்களாக…
லெப். கேணல் கலாத்தன் / செங்கண்ணன்
(சுந்தரலிங்கம் சிறிகரன்–மருதங்கேணி,யாழ்ப்பாணம்)
மேஜர் கொற்றவன்
(குணபாலசிங்கம் ரஞ்சித்செல்வம்–ஆவரங்கால், யாழ்ப்பாணம்)
மேஜர் நீலவண்ணன்
(மரியதாஸ் அல்பிரட்–மணற்குடியிருப்பு, முல்லைத்தீவு)
மேஜர் சிவா
(வேலாயுதம் தயாபரன்–குடத்தனை, யாழ்ப்பாணம்)
கப்டன் திருவாணன்
(குமாரசிங்கம் ரமேஸ்–கோண்டாவில்,யாழ்ப்பாணம்)
கப்டன் ஈழப்பிரியன்
(கிருஸ்ணப்பிள்ளை லோகேஸ்வரன்–கரவட்டி, யாழ்ப்பாணம்.)
கப்டன் நாவலன்
(குணபாலசிங்கம் சுதாகரன்–சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.)
கப்டன் செல்லப்பன்
(இராமையா மகேந்திரன்–பூசாரியார்குளம், வவுனியா)
கப்டன் செந்தளிர்
(இசிதோர் மேரிலூட்ஸ்–முள்ளியான்,யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் நாவரசி
(சண்முகசுந்தரம் பிறேமினி–நெடுங்கேணி, வவுனியா)
லெப்டினன்ட் தயாபரன் (முரளி)
(விஸ்வலிங்கம் உதயகீதன்–பாரதிபுரம், கிளிநொச்சி)
லெப்டினன்ட் புகழ்நம்பி
(இரத்தினம் தனபாலசிங்கம்–நெடுங்கேணி வவுனியா)
லெப்டினன்ட் யாதவன்
(தங்கலோயுதம் சோமகாந்தன்–சுழிபுரம், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் விடுதலைவீரன்
(முத்துலிங்கம் வித்தியாகரன்–புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் தமிழ்வேங்கை
(சின்னத்தம்பி பத்மநாதன்–காரைநகர்,யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கனிவிழி
(வேலுத்தேவன் புவனேஸ்வரி–பாரதிபுரம், கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் கனிமதி
(தர்மகுலசிங்கம் சிவாஜினி–முகாவில்,யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சுபநிலா(கலைநிலா)
(தில்லையம்பலம் றஜனி–மாங்குளம், முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் மூவேந்தன்
(தனேஸ் யோகநாதன்–புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.)
2ம் லெப்டினன்ட் தணிகைச்செல்வி
(இராஜேந்திரம் சுபாசினி–கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்.)
2ம் லெப்டினன்ட் புகழினியன்
(சிவசுப்பிரமணியம் பரஞ்சோதி–ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு)
யாழ். மாவட்டம் கோண்டாவில் பகுதியில் 21.10.1987 அன்று இந்தியப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், முன்னாள் திருகோணமலை மாவட்டச் சிறப்புத் தளபதியுமான லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர்
இரட்டை இலக்கத்தில் அங்கத்தவர்களைக் கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் விளங்கிய காலத்தில் தாக்குதல்கள் பற்றிய திட்டங்கள் போடப்படும்போது குண்டு வீசுவது என்ற பொறுப்பு சந்தோசத்திற்குதான். வெடிமருந்துகள், இயக்கத்தின் நிதி வசதி இவை மிகக் குறைவாக இருந்த காலம் அது. வீசப்படும் ஒவ்வொரு குண்டுகளுக்கும் நிறையப் பலன் எதிர்பார்க்கப்பட்டது. ஆகவே நிதானமாகச் சரியாகக் குண்டு வீசுவதற்குப் பொருத்தமான ஆளாகச் சந்தோசந்தான் பதிவு செய்யப்பட்டான். ஒவ்வொரு தாக்குதலிலும் இயக்கத்தின் எதிர்பார்ப்புக்கும் ஏற்ற வகையில் செயற்பட்டான் சந்தோசம். பின்னர் கண்ணிவெடியை சரியாகக் குறிதவறாது வெடிக்க வைப்பதற்குரிய நபராவும் தேர்ந்தெடுக்கப்பட்டான். போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் திருமலை மாவட்டத்தின் தளபதியாகவும் விளங்கினான்.
விடுதலைப்புலிகளின் வரலாற்றில் முதன்முதல் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலான நெல்லியடி பொலிஸ் ஜீப் மீதான தாக்குதல், சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல், மட்டக்களப்புக் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத் தாக்குதல், யாழ்ப்பாணம் பொன்னாலையில் கடற்படையினர் மீதான கண்ணிவெடித் தாக்குதல், வன்னி உமையாள்புரம் கண்ணிவெடித் தாக்குதல் என்பனவற்றோடு வரலாற்றுப் புகழ்மிக்க திருநெல்வேலித் தாக்குதலிலும் முக்கிய பங்கு கொண்டு தலைவருக்கு உறுதுணையாக விளங்கினான், அது போலவே திருமலையின் வரலாற்றிலும் சந்தோசத்தின் பெயர் அழியா இடம் பெற்றது.
“மாஸ்ரர்” இவ்வாறுதான் 80ஆம் ஆண்டு காலப்பகுதியில் சந்தோசம் திருமலை மகளுக்கு அறிமுகமானவன். பாராளுமன்ற உறுப்பினர் பதவி நகரசபை நிர்வாகம் போன்றன பெயருக்குத்தான் தமிழரிடம், ஆனால் பேருந்து நிலையம் உட்பட நகரின் பல பகுதிகளையும் நிர்வாகித்து வந்தவர்கள் குடியேறிய சிங்களவரே. அதேவேளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விஷக் காய்ச்சல் போல சிங்களக்குடியேற்றம் பரவிக்கொண்டிருந்தது. இப்படியான சூழ்நிலையில்தான் சந்தோசம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதிநிதியாக “மாஸ்ரர்” என்னும் போர்வையில் இயங்கிக் கொண்டிருந்தான். உறுதியான கட்டடத்திற்கு எவ்வாறு ஒவ்வொரு நல்ல கல்லாக தேர்ந்தெடுப்பார்களோ அது போலச் சந்தோசம் ஒழுக்கமான கட்டுபாடான இளைஞர்களை ஒவ்வொருவராகத் தேர்ந்தெடுத்தான்.அத்துடன் சந்தோசம் அவர்களுக்கு முன்மாதிரியாகவும் விளங்கியவன். காட்டிலே அவர்களுள் ஒருவனாக வாழ்ந்து காட்டியவன். சந்தோசம் திருமலை மாவட்டத்தில் அனைத்து மக்களுக்குமே சொந்தமானவன். தென்னைமரவடியிலிருந்து வெருகல் வரைக்குமான எல்லாக் கிராமங்களிலுமே இவனது காலடி பதிந்துள்ளது எனலாம். எல்லாக் கிராமத்தவர்களையுமே இவனுக்குத் தெரியும் ஒவ்வொரு பகுதியிலும் அப்பகுதி மக்களின் பிரச்சினைகள் என்ன என்பது இவனுக்குத் தெரியும் மொத்தத்திலே திருமலையை கரைத்துக்குடித்தவன் என்று சொல்லலாம்.
மேலும் இயக்கத்தின் அரசியல் வேலைகளின் விஸ்தரிப்பிலும் சந்தோசத்தின் பங்கு மிகப்பெரிது எனலாம் “உணர்வு” என்னும் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவனாக இருந்தது முதல் ஆரம்பகாலத்தில் இயக்கத்தினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களைத் தயாரிப்பதிலும் பெரும் பங்குவகித்து அதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தான்.
இதேவேளைதான் தான் ஒரு பல்கலைக்கழக மாணவன் என்னும் நிலையைப் பயன்படுத்தி போராளிகளுக்குத் தேவையான வீடுகள் அறைகள் என்பவற்றை வாடகைக்கு எடுத்து அவற்றில் அவர்களைத் தங்கவைப்பதற்கே பயன்படுத்தினான். இவ்வாறு சகல வேலைகளிலும் சந்தோசத்தின் பங்கு அதிமாக இருந்தது. ஒருமுறை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் நோக்கத்துடன் ஒரு பகுதியில் தொடர்சியாக சில நாட்கள் தங்கவேண்டியேற்ப்பட்டது. அந்த நாட்களில் பல்கலைக்கழகத்தில் பரிட்சை நடைபெற்றுக்கொண்டிருந்தது. சந்தோசத்திற்கு “இறுதி ஆண்டுப் பரிட்சையில் பங்கு பற்றச்செல்” என்று அவனுக்குச் சொல்லப்பட்டது ஆனால் அவன் மனம் அப்பொழுது பரிட்சையில் நாட்டங்கொள்ளவில்லை. தாக்குதல் முடியும் வரை போகமாட்டேன் என்று கூறிவிட்டான் முதலில் போராட்டம் அதன் பின்னர்தான் மற்றவ எல்லாம் என்பதே இவனது நிலை. இந்தச் செய்தியைத் தான் அவன் இன்றைய தலைமுறைக்கு விட்டுச் சென்றான்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்ப்பட்டு நீறு பூத்த நெருப்பாக போராட்டம் இருந்தபொழுது திருமலை மக்களின் மீள்குடியேற்றம் அவர்களின் புனர்வாழ்வு என்பனவற்றில் கூடிய கவனம் செலுத்தினான் அத்துடன் இந்திய இராணுவம் பற்றியும் எச்சரித்தான்.
” இந்தியப்படை இங்கு அமைதி காக்க வரவில்லை எம்மை அழிக்கத்தான் வந்திருகிறது, நாம் அஞ்சக்கூடாது. திருப்பித் தாக்க வேண்டும். எங்களுடைய மண்ணை யாரும் ஆக்கிரமிக்க விடக்கூடாது” என்று போராளிகளுக்கு அறிவுறுத்தினான். அது போலவே செயலிலும் காட்டினான். அது வரை சிறீலங்கா இராணுவத்தினால் உணரப்பட்ட இவனது ஆற்றலை இந்தியப்படைப் படையினர் பின்னர் உணர்ந்து கொண்டனர். இரண்டாயிரம் சாரம் கட்டிய பையன்களின் சக்தி என்ன என்பதை இந்தியப்படையினருக்கு இவன் உணர்த்தினான்.
சொல்லில் நிதானமும், செயலில் வேகமும் கொண்ட சந்தோசம் இந்தியப்படையினருடனான போரில் அவர்களுக்கெதிராகப் பன்னிரண்டு நாள் போரிட்டு இறுதிநாள் தீபாவளி தினத்தன்று கோண்டாவிலில் அவர்களுடன் ஏற்பட்ட போரில் அவர்களது இரண்டு தாங்கிகளை அழித்தபின் ஆற்றாது பின்வாங்கிய அவர்களால் ஏவப்பட்ட ஏறிகனைக்கு இலக்காகி வீரமரணத்தை தழுவிக்கொண்டான். இந்தியப் படையுடனான மோதலில் வீரமரணமடைந்த முதல் லெப். கேணல் ஆனான். எமது போராட்டத்தில் பெரும்பாலான அத்தியாயங்களில் முதலாவது என்று குறிப்பிடும் பொது சந்தோஷத்தின் பெயர் எவ்வாறு குறிபிடப்படுகின்றதோ. அது போலவே இந்திய இராணுவத்துடனான போரில் வீர மரணத்தைத் தழுவிக்கொண்ட முதல் லெப். கேணல் என்று இவனை வரலாறு கூறுகின்றது.
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.