லெப் கேணல் விக்கீஸ்

You are currently viewing லெப் கேணல் விக்கீஸ்

ஆளுமை, பணிவு, வேகம், செயற்றிறன், துணிவு குறிப்பறிந்து பணி செய்யும் ஆற்றல் மிக்க ஒரு விடுதலை வீரன். லெப் கேணல் விக்கீஸ்

விக்கீஸ்…” சில நிமிடங்கள் மௌனமாகிய தீபன் அண்ணையின் வார்த்தைகள் மீண்டும் வேகமாய் ஒலித்தன. “அவரொரு சிறந்த போர்வீரன். துணிச்சல் மிக்க போர்வீரன். சிறந்த நிர்வாகி. இவற்றையும் கடந்து அற்புதமான தளபதி. இவர் தான் இன்று உங்கள் அனைவரினும் முன்னும் அமைதியாய் உறங்கிக்கொண்டிருக்கிறார்” என்ற தளபதி தீபன் அண்ணையின் அஞ்சலி உரையைக் கேட்டதும் வந்திருந்த அனைவரும் மெய்சிலிர்த்து நின்றார்கள்.

அனைவரின் கண்களிலும் கண்ணீர் மௌனமாய் கசிவதும் மறைவதுமாய் இருந்தது. சிலர் வாய்விட்டு அழுதார்கள். பலர் தங்களிற்குள்ளே இரகசியமாய்க் கசிந்தனர். அமைதியின் உறைவிடமாக உருப்பெற்றிருந்தது மண்டபம். இவற்றுக்கு மத்தியில் தளபதி தீபன் அண்ணையின் குரல் மட்டும் அனைவரது காதுகளிலும் நிறைந்தபடி இருந்தது.

விடுதலைப் பாதையில் அல்லும் பகலும் உறக்கமற்று உழைத்த உயர்ந்த தளபதி விக்கீஸ் அண்ணையின் ஆரம்பகால வரலாறுகளை நினைவுபடுத்தினார். “1991ம் ஆண்டு பிற்காலத்தில் சந்திரன் -1 பயிற்சிப்பாசறையில் அவரிடம் இருந்த வேகம், ஒழுக்கம், கொடுக்கப்பட்ட பணியை சிறப்புடன் செய்துமுடிக்கும் பக்குவத் தன்மை இத்தனையும் விடுதலைக்கு விதையாகின்ற இறுதிக்கணம் வரை அவரிடம் அப்படியே இருந்தது.” என்று தளபதி தீபன் அண்ணை சொல்லி முடிக்க நாகர்கோவில் களத்தில் போராளிகளை இரையாக்கும் துடிப்பில் அலையும் சிங்களப் படைகளுக்கு போக்குக்காட்டிச் செயற்படும் அவரின் வேகமும், துணிவும் எங்களை நிறைத்தன.

“பயிற்சியை நிறைவு செய்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த இவர் 1996ஆம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் தன்னை இணைத்து சிங்களப் படைகளின் பாதங்கள் பதிகின்ற இடங்களை அவர்களுக்கு புதைகுழிகளாக மாற்றும் பணியில் சிறப்புடன் செயற்பட்டிருந்தார். 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிங்களப் படைகளால் மேற்கொள்ளப்பட்டிருந்த ‘ஜெயசிக்குறு’ படைநடவடிக்கையில் தளபதி விக்கீஸின் பங்கு முக்கியமானது. எங்களது அனைத்துப் படையணிகளும் சிங்களப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு களத்தில் சிங்களப் படைகளை சரித்துக் கொண்டிருந்த காலம் அது. ஒவ்வொரு காட்டு மரங்களுடனும் போராளிகள் வாழ்ந்துகொண்டிருந்தனர். அப்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்பு தளபதியாக இருந்து ஓயாதஅலைகள்-03 நடவடிக்கையில் வீரச்சாவடைந்த லெப் கேணல் ராகவன் அவர்களின் கீழ் தளபதி விக்கீஸ் செயலாற்றினார்.

“மிகவும் நெருக்கடியான அந்தக் காலத்தில் களத்தின் முன்னிலையில் தீரமாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த தளபதி விக்கீஸ் அவர்களை சிறப்புத் தளபதி லெப் கேணல் ராகவன் இனங்கண்டு என்னிடம் அனுப்பினார். தளபதி ராகவன் அவர்களால் என்னிடம் அனுப்பப்பட்டிருந்த தளபதி விக்கீஸ் புரட்சிக்குளமான இருந்த புளியங்குளத்தில் இரண்டு பணிகளைச் சிறப்பாக ஆற்றியிருந்தார். சிஙிகளப் படைகளுடன் சண்டையிடுவது முதல் போராளிகளின் செயற்பாடுகளுக்கான நிர்வாகச் செயற்பாடுகளையும் பொறுப்பேற்று சிறப்புடன் செய்து முடித்திருந்தார்” என்றவர் “சண்டை நடக்கின்ற களமுனைப் பகுதிகளில் பின்தள நிர்வாகச் செயற்பாடுகளை நிர்வகித்துக் காட்டுவதில் வழிமூடி உறங்கிக்கொண்டிருக்கும் விக்கீஸ் தனித்திறமையுடையவர்”

“ஜெயசிக்குறு நடவடிக்கை காலத்தில் சிங்களப் படைகளின் கனவுகளைத் தகர்க்கும் உக்கிரமான போர் நிகழ்ந்தது. அதற்காக போராளிகளை ஓய்வற்று உறக்கமற்று உணவற்றுக் கூடப் போராடினார்கள். ஒவ்வொரு போராளிகளின் ஈகங்களாலும் களத்தில் சிங்களப் படைகள் சரிந்தார்கள். இது தமிழர் வரலாற்றுச் சரித்திரம். புரட்சிக்குளமாக மாறியிருந்த புளியங்குள மண்ணில் எழுந்த ஆயிரக்கணக்கான சவால்களை எதிர்கொண்டு முன்னணியில் நின்று போராடும் ஒவ்வொரு போராளிக்கும் கடைக்கவேண்டிய அனைத்தையும் உரிய நேரத்தில் சேர்ப்பிக்கும் உன்னதத்தை இந்த தளபதி செயற்படுத்திக் காட்டியிருந்தான்” என்று தீபன் அண்ணை சொல்லிக்ககொள்ள வடகளத்தின் ‘போர்முகப் பயணத்தில்’ சந்தித்திருந்த தளபதி விக்கீஸ் அண்ணையின் செயற்பாடுகள் நினைவில் முட்டிமோதின.

ஒருமுறை நாகர்கோவில் களத்தில் தளபதி விக்கீஸ் அண்ணையுடனான பயணம். இடிந்த நகர்வகழிகள். எனினும் சீராக அமைக்கப்பட்ட மறைப்பு வேலிகள். காப்பரண்களில் நிற்கும் போராளிகளின் உணர்வுகளுடன் உறவாடுவதற்காக நாங்களும், முன்னணி நிலைகளைப் பார்வையிட்டுக் களமுனை நிலைப்பாடுகளை பார்வையிட்டு களமுனை நிலைப்பாடுகளை சீர்செய்வதற்காக தளபதி விக்கீஸ் அண்ணையுடன் சென்றுகொண்டிருந்தோம்.

இருவரும் இணைந்துவிட பயணம் சுவாரசியமானது. விக்கீஸ் அண்ணையின் வயிறு குலுங்கும் பம்பல்கள். ஓரிடத்தில் தகரத்தால் அமைக்கப்பட்டிருந்த மறைப்புவேலி தும்புதும்பாகச் சுருண்டு போயிருந்தது. அந்தப் பகுதியில் இருந்த மணல் பொரிந்துபோய் கறுப்பாயும், வெள்ளையாயும் இருந்தது. சீரான பாதைகளால் நகர்ந்துவந்த எங்களிற்கு கிழிந்துபோயிருக்கும் மறைப்புவேலி களத்தில் அசம்பாவிதங்கள் ஏதோ நிகழ்ந்திருக்கின்றன என்பதை உறுதிசெய்தன.

எங்களின் முன்னால் நகர்ந்துசென்ற தளபதி விக்கீஸ் அண்ணை எங்களைத் திரும்பிப் பார்த்தார். பார்வையில் ஆவேசம் தெரிந்தது. அவரை அறிந்தவர்கள் நினைக்கலாம் அது அவரது இயல்பான தோற்றம் என்று. ஆனால் நான் சொல்லும் ஆவேசம் அந்தச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட பிறிதான மாற்றம். “எங்களின்ர பெடியளுக்கு குடுக்கிறதுக்கு வந்த ஆமிக்காரங்கள் நல்லாய் வேண்டிக்கட்டிக்கொண்டு போட்டினம்.

எங்களின்ர இந்த வேலிக்குள்ள வந்தவுடனையும் தான் சண்டை தொடங்கினது. பெடியள் நல்ல குடுவை குடுத்து ஆமிக்காரங்களின்ர பொடி ஒண்டையும் எடுத்துவிட்டாங்கள். பரவாயில்ல ஆயுதங்களும் எடுத்திருக்கிறாங்கள். அது பெரிய சண்டையில்ல ஆனால் எங்களின்ர பெடியள் தெளிவாய் செயற்பட்டாங்கள்” என்றவர், சிங்களப் படைகளைக் கொல்லும் ஆர்வம் போராளிகளிடம் வேரூன்றி விருட்சமாய் வருவதாய்ச் சொன்னார்.

இத்தனையும் சொல்லி முடித்துவிட்டு “ஒவ்வொரு பத்தைக்குள்ளையும் சிங்களவனுக்குப் புதைகுழி கிண்டவேணும். கட்டாயம் கிண்டுவம். எங்களின்ர பெடியள் செய்துகாட்டுவாங்கள். அண்டைக்கு ஆமிக்காரங்களின்ர ஆர்.பி.ஜியள் பி.கேயள் எல்லாம் எடுத்திருக்கிறாங்கள்” என்று சண்டை நடந்த முன்னரணில் நின்று எங்களிடம் தெளிவுபடுத்தியது நினைவில் நின்றது.

அந்தச் சண்டை நடந்து முடிந்து ஓரிரு நாட்கள்தான் கடந்திருக்க வேண்டும். முன்னர் அடைக்கப்பட்டிருப்பதைப் போல அதே தகரங்கள். கம்பிக்கட்டைகளாக மரங்கள் என்று எல்லாமே புதிதாக வந்திருந்தன. அவற்றுக்கு அருகில் போய் நின்றபடியே “தம்பியாக்கள் வேலி அடைக்கேக்குள்ள கவனமாய் அடைக்கவேணும். மற்றது தகரத்துக்கு இந்த ஆணியளை அடிக்காதையுங்கோ. குடைஆணி எடுப்பிச்சுத் தாறன். இந்த ஆணி அடிச்சால் காத்துக்கு எல்லாத்தையும் பிச்சுக்கொண்டுபோகும். பிறகு இன்னும் ஒருக்கால் அதுக்குள்ள நிண்டு அடைக்க வேண்டிவரும்” என்று போராளிகளுடன் பக்குவமாய்க் கதைத்துக்கொண்டிருந்தது என்று அனைத்தும் நினைவில் வந்தன. இனி அந்த நாட்கள் மீண்டும் மலருமா…? இல்லை மலர்ந்து விடவேண்டும் என்று எண்ணிய மனசு துயரத்தில் துடித்தது.

களமுனை நினைவுகள் நெஞ்சை நிறைக்க தீபன் அண்ணையின் உரையை இடையில் தவறவிட்டு விட்டோம். மிகுதியை மனதில் பதியவைத்தோம். “எந்தக் களமுனையாக இருந்தாலும் சரி. அங்கு போரிடும் வீரருக்குப் பின்னால் பின்தள நிர்வாகச் செயற்பாடுகளை தளபதி விக்கீஸ் பொறுப்பேற்றுச் செய்கிறார் என்றால் களத்தில் நிற்கும் போராளிகள் இன்னும்; ஒருபடி மேலதிகமாய் செயற்படுவார்கள். ஏனென்றால் எந்தச் சவாலையும் இலகுவில் எதிர்கொண்டு தனக்குத் தரப்பட்ட பணியை ஒருபடி மேலாய் செய்துமுடிக்கும் திறமை அவரிடம் இயல்பாகவே நிலைபெற்றிருக்கிறது” என்ற தளபதி தீபன் அண்ணை “இத்தனை திறமைகள் விக்கீஸிடம் இருந்ததால் அவரை பின்தள நிர்வாகச் செயற்பாடுகளை சீர்செய்வதில் நான் ஈடுபடுத்திவந்தேன். குறிப்பாக ஜெயசிக்குறு அதனுடன் சமநேரத்தில் நடத்தப்பட்ட சிறாட்டிக்குளம், மன்னார், கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மணலாறு களங்களில் நெருக்கடிகளின் மத்தியில் சிறப்பாகச் செய்து முடித்திருந்தார்” என்றார்.

“இந்தக் கட்டத்தில ‘அண்ண நான் முன்னுக்கு நிண்டு ஆமிக்காரங்களைக் கொல்ல வேணும். எனக்கு அந்தச் சந்தர்ப்பத்தை நீங்கள் தரவேணும். எனக்கு அடிபடுடதுக்கு சந்தர்ப்பத்தை நீங்கள் தரவேணும். நான் முன்னுக்கு நிக்கப்போறன்’ என்று என்னிடம் பல தடவைகள் கேட்டிருந்தார். அந்த நேரத்தில எல்லாம் நான் ‘விக்கீஸ் நீங்கள் பின்தளத்தில் நிண்டு செயற்படுறது போராளிகளுக்கு நல்ல உற்சாகத்தைக் கொடுக்கும். நீங்கள் உங்களின்ர பணியை நல்ல சிறப்பாய் செய்யிறியள்.

தொடர்ந்து இந்தப் பணியை நீங்கள் செய்யுங்கோ” என்று சொல்லியிருந்தேன். இறுதியாக அவரின் விடாப்பிடியான வேண்டுதலால் அவருக்கு முன்தளத்தில நிண்டு சண்டை பிடிக்கும் சந்தர்ப்பத்தைக் கொடுத்திருந்தன்” என்ற தீபன் அண்ணை விக்கீஸ் அண்ணையின் குணவியல்புகள் பற்றியும் அவரது களமுனைச் செயற்பாடுகள் பற்றியும் விரிவாகச் சொல்லிக்கொண்டிருந்தார். இறுதி அஞ்சலிக்காக திரண்டிருந்த மக்கள் கூட்டம் வீரத்தளபதியின் சாதனைகளைக் கேட்டு பெருமை கொண்டாலும் இழந்துவிட்டோமே என்ற வேதனை அனைவரையும் ஓங்கி அறைந்தது.

இத்தனையையும் கடந்து தீபன் அண்ணையின் அஞ்சலி உரை முக்கிய கட்டம் ஒன்றை எட்டியிருந்தது. “ஓயாதஅலைகள்-03 நடவடிக்கை ஆரம்பமாகி ஆனையிறவு விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டுவிட்டது. நூற்றுக்கணக்கான சிங்களப் படைகள் கொல்லப்பட்ட களமுனையில் சிதறிக் கிடக்கிறார்கள். தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக சிங்களதேசம் உலகெங்கும் கையேந்திப் பெற்ற ஆயுதங்கள் வெடிமருந்துகள் என்றெல்லாம் ஆனையிறவு நிலங்கள் எல்லாம் பரவிக்கிடக்கின்றன. உண்மையில் அது சிங்களத்தின் மரணக் களமாகப் பூத்திருந்தது. சிங்களப் படைகளின் நிலைகள் காப்பரண்கள் எல்லாம் இடிந்தும் சிதறியும் மரணக்களத்தின் நீண்டதூரத்தைக் கடந்துவிட்டன.

“சிங்களதேசத்தின் உயிரற்ற பிணங்களை தாங்கிய அந்த நிலம் விடுதலை பெற்றிருந்தது” என்று தீபன் அண்ணை உரையாற்றிக்கொண்டிருக்க துயரத்தில் துவண்டவர்கள் அனைவரும் ஒருதடவை மீண்டெழுந்தனர். அனைவரது காதுகளும் முன்னரைவிட இன்னும் கூர்மையாகிவிட்டன. அடுத்தது என்ன சொல்லப் போகின்றார் என்ற எதிர்பார்ப்புடன் அனைவரும் தீபன் அண்ணாவின் முகத்தையும் அவரது வாயசைவையும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“சண்டைகளின் உக்கிரத்தில் போராளிகள் முன்னேறிக்கொண்டிருந்தனர். சிங்களப் படைகள் திணறிக்கொண்டிருந்தன. பிரிகேடியர் பால்ராஜ் அண்ண இந்த நிலத்தின் மீட்புக்காக இத்தாவிலில் தரையிறங்கியிருந்தார். ஆனையிறவைக் கைப்பற்றியிருந்த எங்களுடைய போராளிகள் இத்தாவில் தரையிறங்கியிருக்கும் பால்ராஜ் அண்ணாவின் அணியுடன் சென்று இணையவேண்டும். தொடர் சண்டை. பளை வரைக்கும் சிங்களப் படைகளைக் கலைத்துவிட்டோம். தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருத களத்தில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டுவிட்டது.” என்று சொல்ல மண்டபம் அமைதியால் நிறைந்தது.

இவர் 1991 இன் இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார். 1992, 1993 ஆம் ஆண்டுகளில் பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

1994 இல் இருந்து 1996 வரை எதிரி பற்றிய தகவல் சேகரிப்பில் ஈடுபட்டார். இவர் பெரும்பாலும் களநிர்வாகப் பொறுப்பாளராகவும் பின்னணி ஒழுங்கிணைப்பாளருமாக இருந்தார்.

2000 ஆம் ஆண்டு மீள இணைந்தோரின் (4.1) படையணிக்குப் பொறுப்பாக இருந்தார். இதேயாண்டு உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற 21 காப்பரண்கள் மீதான தாக்குதலின் போது 4.1 படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப் படையணி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்தார்.

இதேயாண்டு பளையைக் கைப்பற்றிய அணிக்குப் பொறுப்பாக இருந்தார். மீள இணைந்தோரின் படையணி, சோதியா படையணி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்து கைதடி, தச்சன்காட்டுப் பகுதிகளை கைப்பற்றும் தாக்குதல்களிலும் 4.1 படையணி, மாலதி படையணி, எல்லைப் படையணி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்து சாவகச்சேரியைக் கைப்பற்றும் தாக்குதலிலும் பங்குகொண்டார்.

2001 இல் 82 மி.மீ மோட்டார் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

அதேவேளை தீச்சுவாலை நடவடிக்கையின்போது முறியடிப்பு நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்தார். 23.04.2008 முகமாலை முறியடிப்புச் சமரில் முறியடிப்பு அணிக்கும் 02 ஆம் கோட்டில் நின்ற அணிக்கும் பொறுப்பாக இருந்தார்.

08.05.1971 அன்று வவுனியா மாவட்டத்தில் பிறந்த சதாசிவம் சதானந்தன் (விக்கீசு) ஜீவனா (போராளி) மண இணையருக்கு பவித்திரன், யாழன்பன், கோவரசன் என மூன்று பிள்ளைகள் உள்ளன.

கீழே தரப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் அவரது பன்முக ஆற்றலை வெளிப்படுத்துகின்றன.

குடாரப்பில் கரையிறங்கிய அணியோடு பளையூடாகச் சென்று இணைவதில் தடையேற்பட்டபோது கேணல் தீபனின் பணிப்புக்கமைய மிகக் குறைந்தளவு போராளிகளுடன் வாழ்வா சாவா என்ற போராட்டத்திடையே உறுதியாக நின்று பளையில் எதிரியின் எதிர்ப்பை முறியடித்து அணிகளின் இணைவுக்கு வழிசமைத்தார்.

25.04.2001 தீச்சுவாலை நடவடிக்கைக்கு முன்பாக அந்த வெற்றிக்குக் காரணமாக இருந்தவற்றுள் ஒன்றான வலுவான காப்பரண்களைக் குறுகிய காலத்தில் பணியாளர்களைக்கொண்டு சிறப்பாக அமைத்து முடித்தார்.

மேலும் அவரோடு நின்ற பணியாளர்கள் அவரின் நடத்தையால் ஈர்க்கப்பட்டு அந்தச் சமரில் நேரடியாகக் கலந்து குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றினர். இது அவரது பொறியாண்மை ஆற்றலையும், ஆளுமையையும் வெளிப்படுத்திய ஒரு நிகழ்ச்சியாகும்.

11.08.2006 முகமாலையில் இடம்பெற்ற சமரில் கிளாலிக் கரையூடு முன்னேறிய எமது அணியினரை எதிரி சுற்றிவளைத்து எமது உடைப்புப் பகுதியை மூடும் நிலை உருவாகியது. அப்போது கேணல் தீபனின் பணிப்புக்கமைய அணியோடு சென்ற விக்கீசு அவர்களோடு இணைந்து கிளாலி உடைப்பு மூலையில் 150 மீற்றர் கரைப்பக்கமும் கிளாலி முகமாலைக் கோட்டிலும் நிலையமைத்து நின்றார்.

எதிரியின் தாக்குதலால் இந்த நிலையின் நீளம் குறுகியபோதும் அணியினர் எல்லோரும் வெளியேறும் வரை எதிரி அந்தப் பகுதியை மூடாது தடுத்து நின்றார்.

11.10.2006 முகமாலையில் இடம்பெற்ற எதிரியின் வலிந்த தாக்குதலின்போது களநிர்வாகத்தைப் பொறுப்பெடுத்து இரண்டாவது கோட்டிற்கான காப்பரண்களை விரைவாக அமைத்ததுடன் சமரின் ஒரு கட்டத்தில் இரண்டாவது கோட்டுச் சமரையும் வழிநடத்தி எதிரிக்குப் பாரிய இழப்பினை ஏற்படுத்தினார்.

23.04.2008 அன்று முகமாலையில் இடம்பெற்ற வலிந்ததாக்குதல் முறியடிப்புச் சமரின்போது, இறுதியாக மீட்டகப்பட்ட NP08 நிலைக்கு அவரோடு நின்ற வடிவரசனுடன் ஆறு போராளிகளை அனுப்பி பின்பு அங்கு வந்த நித்திலனின் அணியுடன் இணைந்து அந்தக் காப்பரணை மீட்கும் பணியை நிறைவாகச் செய்தார்.

லெப்.கேணல் விக்கீசு ஆளுமை, பணிவு, வேகம், செயற்றிறன், துணிவு குறிப்பறிந்து பணி செய்யும் ஆற்றல் மிக்க ஒரு விடுதலை வீரன். 10.08.2008 அன்று வீரச்சாவடைந்தார்.

செ.யோ.யோகி
பொறுப்பாளர்,
சமராய்வு மையம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,

தகவல்கள்:
பிரிகேடியர் தீபன்
கட்டளைத் தளபதி
தமிழீழ விடுதலைப் புலிகள்

பகிர்ந்துகொள்ள