வங்காளதேசத்தில் கலவரத்தை ஒடுக்கும் நோக்கில், பொலிசாருக்கு கண்டதும் சுட உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், இணைய சேவைகள் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தால், இதுவரை இறப்பு எண்ணிக்கை 100 கடந்துள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று பகல் வரையில் ஊரடங்கு நீடிக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது ஞாயிறும் ஊரடங்கு நீடித்துள்ளதாக கூறப்படுகிறது.
ராணுவத்தினர் களமிறங்கியுள்ளதுடன், தலைநகர் டாக்கா தெருக்களில் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, சனிக்கிழமை சில மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வாய்ப்பளிக்கப்பட்டது.
ஆனால் அதன் பின்னர் மக்கள் வீட்டிலேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்து கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நள்ளிரவில் இருந்தே இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
கலவரத்தால் கொல்லப்பட்டவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் எண்ணிக்கையை அரசாங்கம் இதுவரை உத்தியோகப்பூர்வமாக வெளியிடவில்லை.
ஆனால் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000 இருக்கலாம் என்றும் இறந்தவர்கள் எண்ணிக்கை 115 என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, ஊரடங்கு உத்தரவுகளை மீறும் குழுக்கள் அல்லது நபர்கள் மீது கண்டதும் சுட உத்தரவும் அளிக்கப்பட்டுள்ளது.