வங்குரோத்தடையச் செய்தவர்களிடமே பொருளாதார கொள்கைகளை உருவாக்கும் பொறுப்பு!

You are currently viewing வங்குரோத்தடையச் செய்தவர்களிடமே பொருளாதார கொள்கைகளை உருவாக்கும் பொறுப்பு!

நாட்டை வங்குரோத்தடையச் செய்த ராஜபக்ஷக்களிடமே அபிவிருத்தி மற்றும் பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதற்கான பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான அரசியல் தந்திர செயற்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டுக்கு தற்போது மேம்பாட்டு வேலைத்திட்டங்களே அவசியமாக உள்ளன. எனது தந்தை ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் இரு யுத்தங்கள் நடைபெற்றன. ஆனால், அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது என்று கூறவில்லை.

அன்று ஆடை தொழிற்சாலைகளை அவர் ஆரம்பித்தபோது, வெள்ளையர்களுக்கு உள்ளாடை தயாரித்துக் கொடுப்பதற்கு ரணசிங்க பிரேமதாச இளைஞர்களை பயன்படுத்திக்கொள்வதாகக் கூறினர். ஆனால் இன்று, ஆடை தொழிற்சாலைகளை அவர் மேலும் அதிகரித்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

எனது தந்தை இன்று உயிருடன் இருந்திருந்தால், இலங்கை ஏற்றுமதி வருமானத்தில் சூரராக இருந்திருக்கும். ஆனால், தற்போதுள்ள அரசாங்கத்திடம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை. சமூக பாதுகாப்புத் திட்டங்களும் இல்லை. மாறாக, ராஜபக்ஷக்களை பாதுகாப்பதையும், அமைச்சுப் பதவிகளை வழங்குவதையுமே பிரதான வேலையாக செய்துகொண்டிருக்கிறது.

தற்போது காகத்திடமிருந்து மீண்டும் அமைச்சரவைக்கான பெயர்ப்பட்டியலொன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறிருக்க தேசிய சபையின் உப குழுவொன்றின் தலைவராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டை வங்குரோத்தடையச் செய்த ராஜபக்ஷக்களிடம் அபிவிருத்தி, நாட்டின் கொள்கைகளை உருவாக்குவதற்கு தேவையான குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை தயாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது அரசியலில் தந்திர செயற்பாடுகளே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. நாட்டின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் வரிக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும். தேவைகளை இலக்காகக் கொண்டு செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், எவ்வளவு அழுத்தங்களும் அசௌகரியங்களும் இருந்தாலும், அதை குறைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அரசாங்கத்தின் அரசியல் மோசடிகளில் அங்கம் வகிக்க ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியோ தயாராக இல்லை.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசப்பட்ட எந்தவொரு விடயத்தையும் அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை. மாறாக, தங்களுக்கு நன்மை பயக்கும் பகுதியை மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் பிரகாரம் உள்ளன. தற்போது நாட்டினதும் நாட்டு மக்களினதும் தேவையாக இருப்பது தேர்தலாகும். ஐக்கிய மக்கள் சக்திக்கும் அதுவே தேவையாகும்.

தற்போது எந்தத் தேர்தலை நடத்தினாலும், ஐக்கிய மக்கள் சக்தி அதில் பாரிய வெற்றியை பெற்றுக்கொள்ளும் என்பதை உறுதியாக கூறுகின்றேன் என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply