வடகிழக்கில் சிங்கள இராணுவம் இனவாதத்தை தூண்டுகிறது:திருமிகு கயேந்திரகுமார்

You are currently viewing வடகிழக்கில் சிங்கள இராணுவம் இனவாதத்தை தூண்டுகிறது:திருமிகு கயேந்திரகுமார்
கௌரவ குழுக்களின் பிரதித் தலைவர் அவர்களே,
பிரிவினைகளை ஏற்படுத்தும் இனவாத நடவடிக்கைகளிலேயே இராணுவம தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது என்று தொடர்ச்சியாக நான் சொல்லிவருகிறேன். தமிழ் மக்களுக்கு எதிராக அவர்கள் ஒரு போரை நடத்தியதோடு, அவர்கள் அந்த மனநிலையில் இருந்து வெளியே வரவில்லை.
தமிழ் நலன்களுக்கு எதிரான மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு நிறுவனமாகவே இராணுவம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது என்பதை பொறுப்புடன் கூறுகிறேன்.
தையிட்டியில் சட்டவிரோத திஸ்ஸ விகாரையை கட்டுவதில் இராணுவத்தினர் எவ்வாறு செயற்பட்டனர் என்பது இதற்கு சிறந்த உதாரணமாகும்.
அப்போதைய இராணுவத் தளபதியால் தனியாருக்குச் சொந்தமான காணியில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்டிருக்கிறது. அடிக்கல் நாட்டப்பட்ட சில நாட்களிலேயே மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இவ்விடயம் விவாதிக்கப்பட்டது. அதில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலர், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர்; ஆகியோர் கலந்துகொண்டு, தையிட்டி திஸ்ஸ விகாரையானது தனியார் காணியில் இருப்பதும், இந்த காணியானது எந்த விகாரைக்கும் சொந்தமானது அல்ல என்பதையும் உறுதிப்படுத்தியிருந்தனர்.
குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மேற்கொண்டு எந்தவொரு கட்டுமான நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்றும், கட்டுமான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் தீர்;மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையிலும், இராணுவமே சட்டவிரோத விகாரையை கட்டியது.
குறித்த விடயம் தொடர்பாக – 2024 டிசம்பர் 13 ஆம் திகதிய கௌரவ கடற்றொழில் அமைச்சர் திரு சந்திரசேகரன் அவர்கள் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதிய மேன்மைதங்கிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய போதும் மீண்டும் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது தையிட்டி திஸ்ஸ விகாரை கட்டப்பட்டுள்ள நிலம் தனியாருக்கு சொந்தமான நிலம் என்றும், எந்தவொரு முறையான சட்ட நடைமுறையும் இன்றி, சட்ட விரோதமாகவே விகாரை கட்டப்பட்டது என்றும், இவ்விடயம் குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டிருந்தேன்.
இந்த நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவரிடம் புதியதொரு விடயத்தைக் கொண்டுவருகின்றேன். அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் எழுதிய கடிதம் தொடர்பாக இன்றைய உதயன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவ்விடயம் தொடர்பான கடிதத்தை இன்று சபையில் சமர்ப்பிக்கிறேன். அக்கடிதத்தில் சந்திரா நிமல் வாக்கிஸ்கா என்பவர் அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் தலைவர் என்று அவரது கையொப்பம் இடப்பட்டுள்ளது.
தையிட்டி திஸ்ஸ விகாரைக் கட்டுமானமுள்ள 6 ஏக்கர் காணியும், உண்மையில் தனியாருக்குச் சொந்தமானதான இருக்கும் நிலையில், சட்டவிரோத விகாரை அமைக்கப்பட்டுள்ள இடம் தேவநம்பிய திஸ்ஸ மன்னன் காலத்தில் இருந்து திஸ்ஸ விகாரைக்கு சொந்தமானது எனவும், ; திஸ்ஸ விகாரைக்கு 14 ஏக்கர் காணி இருந்ததெனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, தனியாருக்குச் சொந்தமான காணிகளையும், அதனுடன் சேர்த்து மேலும் பல ஏக்கர் நிலத்தையும் பறிமுதல் செய்து வழங்க வேண்டும் என்றும், தனியாருக்கு சொந்தமான காணிகளை காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கௌரவ குழுக்களின் பிரதித் தலைவரே,
இராணுவம் ஒரு இனவாத கட்டமைப்பில் செயற்படுகின்றது என்று நான் குறிப்பிடுவது இதனால்தான். அது அதன் மனநிலையையிலிருந்து மாற்றவில்லை. நான் கூறும் கூற்றுக்களில் ஓரளவு உண்மை இருப்பதாக நீங்கள் கருதினால் நீங்கள் சட்டபூர்வ செயல்முறையொன்றுக்கு செல்ல வேண்டும். இராணுவமென்றால் எந்தச் சட்டத்தையும் மீறலாம் என்ற நிலை இருக்கமுடியாது. காட்டுச் சட்டங்களைப் பிரயோகிக்க முடியாது. ஆனால் இன்னும் அந்த அடிப்படையிலேயே அவர்கள் செயற்படுகிறார்கள்.
இந்தக் கடித்தை எழுதியிருந்த அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் தற்போதைய தலைவர் யார் என்று நான் தேடியபோது, ​​அவர் தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளராகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் செயற்பட்ட ஒருவராவார். எனவே, இங்கே ஒழுங்கமைக்கப்படும் இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளின் இணைப்பை நீங்கள் பார்க்கலாம்.
இந்த அரசாங்கம் இனவாதக் கொள்கைகளை பின்பற்றப் போவதில்லை என்றும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டப் போகிறது என்றும் கூறிய உறுதிமொழிகளுக்கு உண்மையாக இருக்குமாயின் சட்டம் நியாயமானதாக இருக்க வேண்டும். எவரும் சட்டத்தை மீறுவதற்கு அனுமதிக்க முடியாது.
எனவே -தனியார் காணிகளில் கட்டப்பட்ட இந்த தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை விவகாரத்தை எப்படி கையாள்கிறது என்பதை பொறுத்தே இந்த அரசாங்கம் இனவாதமுடையாதா? இல்லையா? என்பது புலப்படும்.
திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான நிலத்தில் விகாரை அமைக்கக் கூடியதாக இருந்தும் இந்தச் சட்ட விரோதச் செயலுக்காக தனியாருக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்க அவர்கள் தேர்வு செய்திருப்பது விரும்பத்தகாத ஒன்றாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பகிர்ந்துகொள்ள

Leave a Reply