வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

You are currently viewing வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்த நிலையில், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்பொருட்டு அவர் இம்மாதம் ரஷ்யாவுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரியாவுக்கு வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச சமூகத்தில் இதற்கான விலையை அவர்கள் கொடுப்பார்கள் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால், கிம் ஜோங் உன் வருகை தொடர்பில் அமெரிக்காவின் கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை என ரஷ்யா பதிலளித்துள்ளது.

வடகொரிய அதிகாரிகள் தரப்பு முதற்கட்ட பேச்சுவார்த்தை முன்னெடுப்பார்கள் எனவும், தேவையெனில் தனியாக இரு தலைவர்களும் ஆலோசனை முன்னெடுப்பார்கள் என கூறப்படுகிறது.

மேலும், உக்ரேனியர்களைக் கொல்லும் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கக்கூடாது என்ற பொது உறுதிமொழிகளுக்கு வட கொரியா கட்டுப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுப்போம் என ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply