இலங்கைத்தீவின் வரலாற்றில், தமிழர்களும் சிங்களவர்களும் தம்மை தாமே ஆளும் சுயாதீன இராச்சியங்களை கொண்டிருந்தனர். காலனித்துவ ஆட்சியாளர்களான போத்துக்கீசர், ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியர்கள் தங்களுடைய சுமார் 300 வருட ஆரம்ப ஆட்சிக் காலத்தில் சிங்கள இராச்சியங்களையும், தமிழ் இராச்சியங்களையும் தனித்தனியாக நிர்வகித்து வந்தனர்
1833ம் ஆண்டு கோல்புரூக் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் தம்முடைய நிர்வாக நடைமுறையை இலகுபடுத்துவதற்காக சிங்கள இராச்சியங்களும், தமிழ் இராச்சியங்களும் பிரித்தானியர்களால் இணைக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை முதலில் சிங்கள தேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மேலே சொல்லப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை முற்றாகப் புறந்தள்ளி எண்ணிக்கைப் பெரும்பான்மை அடிப்படையில் முழுநாட்டினதும் அதிகாரங்கள் சிங்களதேசத்திடம் கைமாற்றப்பட்டது. அதன் மூலம் தமிழர் தேசம் என்பது மழுங்கடிக்கப்பட்டு, தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுவதோடு, இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அடுத்தடுத்து வந்த சிங்கள ஆட்சியாளர்கள் எப்பொழுதும் சிங்களவர்களுக்கு கடும் தேசியவாதத்தை போசித்தும், ஊக்கப்படுத்தியும் வந்துள்ளதோடு தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு தமது இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதை உலகம் பாராமுகமாக இருந்து வருகிறது. வட்டுக்கோட்டைத் தீர்மானம்:
தமிழ் மக்களுக்கு உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனியான சுதந்திர தமிழீழ அரசை அமைப்பதற்காக 1976ம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினால் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு, 1977ம் ஆண்டுப் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வழங்கப்பட்ட மகத்தான மக்கள் ஆணையே ஈழத் தமிழர்கள் சனநாயக முறையில் நடாத்தப்பட்ட ஒரு பொதுவாக்கெடுப்பில் தமது சுதந்தர வேட்கையை வெளிப்படுத்தியிருந்தது என்பதைப் பன்னாட்டு சமூகம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஒற்றையாட்சி அமைப்பைக் கொண்டு 1978ம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியலமைப்பானது தமிழ் மக்களின் விருப்புக்கு மாறாக அவர்களின் ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது என்பதை இந்தப் பிராந்தியத்தில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான்கு தசாப்த காலமாக பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வன்முறையற்ற அமைதியான அரசியல் போராட்ட வழிமுறையூடாக வென்றெடுப்பதற்காக அடுத்தடுத்து வந்த சிங்கள ஆட்சியாளர்களோடு ஒத்துழைத்து, தங்களது ஆகக் குறைந்தபட்ச அரசியல் உரிமைகளைக் கூட பெற்றுக் கொள்வது சாத்தியமற்றது என்று நிரூபிக்கப்பட்டுதோடு, எமது சாத்வீகப் போராட்டங்கள் ஆயுதமுனையில் அடக்கப்பட்ட காரணத்தாலேயே, இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வேறு வழிமுறைகள் இல்லாத சூழலில் தற்காப்புக்காக தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோற்றம்பெற்றதோடு, தமிழர்களின் உரிமைக்கான கோரிக்கையாக சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு வலுப்பெற்றது என்பதை சம்மந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
திட்டமிட்ட இனப்படுகொலை:
1985ம் ஆண்டு பூட்டான் தலைநகர் திம்புவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் ஆயுதப் போராட்ட அமைப்புகள் உள்ளடங்கலாக அனைத்துத் தமிழ் அரசியல் அமைப்புக்களும் ஏகமனதாக தங்களுடைய அடிப்படைக் கோரிக்கைகளாக தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தமிழர் சுயநிர்ணய உரிமை என்பவற்றை முன்வைத்திருந்தமை கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் வழியில் தீர்வு காண்பதற்குரிய நடைமுறைகளில் முன்னேற்றம் காணப்படாததன் விளைவாக, தமிழரின் ஆயுதப் போராட்டம் தொடர்ந்ததோடு, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழரின் அரசியல் – இராணுவ பலமாக மேலெழுந்து அடுத்தடுத்து வந்த சிறிலங்கா ஆட்சியாளர்களுடன், தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்களைச் செய்து கொண்ட போதிலும் சிங்கள ஆட்சியாளரின் நேர்மையற்ற அணுகுமுறைகளால் பேச்சுவார்த்தைகளில் தீர்வுகள் எதுவும் எட்டப்பட முடியவில்லை என்ற கசப்பான உண்மை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனப்படுகொலை, கடந்த 70 வருடங்களுக்கு மேலாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்களின் துணையோடு, தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட, நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற கட்டமைக்கப்பட்ட படுகொலைகள் – 2009ல் மேற்கொள்ளப்பட்ட அதியுச்ச இனவழிப்புப் படுகொலைகள் உட்பட, மனிதப் படுகொலைகள், நிலங்களைக் கையகப்படுத்தல், பாலியல் வன்முறைகள், கலாசாரம் மற்றும் பொருளாதாரக் கட்டுமானங்களை அழித்தல் போன்ற வன்முறைகள் மூலம், தமிழ் மக்களுடைய தேசத்துக்கான தகுதிப்பாட்டைத் தாங்கிநிற்கும் அனைத்து விழுமியங்களும் அழித்தொழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை ஏற்றுக் கொண்டும், வடக்கு மாகாண சபையில் கடந்த 10.02.2015 பின்னர் 16.09.2015 இல் தமிழக சட்டசபையிலும் நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானங்களில், அடுத்தடுத்து வந்த சிறிலங்கா ஆட்சியாளர்கள் நிகழ்த்திய இனப்படுகொலைகளை உலகுக்கு அம்பலப்படுத்தியிருந்ததையும் நாம் கூட்டாக மீண்டுமொரு தடவை அனைவரின் கவனத்திற்கும் உட்படுத்துகின்றோம்.
பேரெழுச்சிப் பிரகடனம்:
மேற்குறித்த யதார்த்த நிலைகளை கருத்தில் கொண்டு, தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக தமிழர்களை ஒரு தனித்த தேசமாக, அவர்களின் பாராதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது மட்டுமே, மேலே குறிப்பிட்ட அனைத்து ஒடுக்குமுறைகளும் மீள நிகழாது இருப்பதை உறுதிசெய்யும் என்பதை வலியுறுத்தியும், தமிழர் தேசத்தின் வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் தங்களுடைய தனியான இறைமையை யாருக்கும் கையளித்திருக்கவில்லை என்பதைக் கருத்தில் கொண்டும், வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய இந்தப் பேரெழுச்சியின் பிரகடனமானது, தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வாக, சர்வதேச சட்டத்தின் ஆட்சித் தத்துவங்களுக்கு ஏற்புடையதாகவும், மனித உரிமைகள் எல்லா நபர்களுக்கும் சமத்துவமானது என்ற அடிப்படையிலும், சுயநிர்ணய உரிமையினை மதித்தும், அக்கறையுள்ள அனைத்து தரப்பினர்கள் முன்னிலையிலும் நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்குமாக முன்வைக்கப்படும் தீர்மானங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு இந்தப் பேரணி வலியுறுத்துகிறது.
அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையானது அரசியலமைப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கு முன், பின்வரும் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில் இருந்து ஆரம்பிக்கப்படல் வேண்டும்.
1. இந்த உடன்படிக்கையானது, ஏனைய விடயங்களிற்கும் மேலாக, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, அதன் இறைமை மற்றும் தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுத் தாயகம் அங்கீகரிக்கப்படுவதோடு, முதலில் தமிழர் தாயகத்திலிருந்து ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்.
2. இந்த உடன்படிக்கையானது தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.
3. இந்த உடன்படிக்கை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்யப்பட்டால், சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் ஒழுங்குபடுத்தல், கண்காணிப்பு என்பவற்றோடு, தமிழ் மக்கள் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற ஏற்பாடு இவ் உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டும்.
4. இந்த உடன்படிகை மூன்றாம் தரப்பான சர்வதேச தரப்பினரின் முன்னிலையில் எழுதப்பட வேண்டும். பாதுகாக்கப்படவேண்டிய தமிழர் அடையாளம்:
பேச்சுவார்த்தையின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்:
1. தொடர்ச்சியாக, திட்டமிட்ட இனப்படுகொலைக்கு உள்ளாகி வரும் தேசம் என்ற வகையில், தமிழ் மக்கள் தமது அடையாளத்தை பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.
2. தமிழ் மக்கள் இனவழிப்பிற்கு முகங்கொடுத்து வரும் நிலையில், தமிழர்களின் தேசிய அடையாளத்தின் பாதுகாப்பு மற்றும் ஒரு தேசமாக இருத்தல் என்பவை சமரசத்திற்கு அப்பாற்பட்டதாகவும், உறுதியான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
3. முதலில், இரு தரப்பும் கூட்டாக பேச்சுவார்த்தை செய்வதற்கான தெளிவான வழிவரைபடத்தை சர்வதேச மத்தியஸ்தத்துடன் தயார் செய்ய வேண்டும். இது தெளிவான அடைவுகளையும் அதன் கால அட்டவணைகளையும் கொண்டிருக்க வேண்டும்.
4. பேச்சுவார்த்தைகள் இரண்டு தளங்களில் சமாந்தரமாக நடாத்தப்பட வேண்டும் ஒன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது மற்றையது இறுதி அரசியல் தீர்வை நோக்கியதாக இருக்கவேண்டும்.
5. உடனடிப் பிரச்சினைகள் குறித்துப் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
5.1. தொல்பொருள் ஆராய்ச்சி, வன ஜீவராசிகள் திணைக்களம், வனவள பாதுகாப்புத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தித் திட்டம் எனும் போர்வையில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான நில அபகரிப்புத் திட்டங்களும் நிறுத்தப்படுவதோடு அபகரிக்கப்பட்ட காணிகளை உடனடியாக உரியவர்களிடம் மீள ஒப்புடைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
5.2. தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அனைத்து சிங்களக் குடியேற்றங்களும் அகற்றப்பட வேண்டும்.
5.3. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படவேண்டும். 5.4. உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மாற்றங்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவரவேண்டும்.
5.5. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு சர்வதேச நீதி வழங்கப்படுவதோடு குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
5.6. பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நீக்கப்படவேண்டும்.
5.7. மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதும், திட்டமிட்ட இன அடக்குமுறைக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் மாணவர்கள் மற்றும் மக்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுதல் மற்றும் கைதுசெய்யப்படுதல் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
5.8. தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்படுத்தும் அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும், தடைகளையும் நிறுத்தவேண்டும்.
5.9. காலகாலமாக நடைபெற்று வரும் தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதிப் பொறிமுறை (சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் – ஐஊஊ, சர்வதேச நீதிமன்றம்- ஐஊது) ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பரிகார நீதி வழங்கப் படவேண்டும். அத்துடன் ஐக்கிய நாடுகள் அவையால் விசேடமாக உருவாக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் விசாரணைப் பொறிமுறைகளும் அனுமதிக்கப்படவேண்டும்.
5.9.0. இறுதி அரசியல் தீர்வொன்று எட்டப்படும் வரை தமிழ் மக்கள் தமது தாயகத்தின் அன்றாட விவகாரங்களை நடாத்துவதற்கு இடைக்கால நிர்வாகப் பொறிமுறையொன்று உருவாக்கப்படவேண்டும்.
திம்பு கோட்பாடுகள்:
6. இறுதி அரசியல் தீர்வைக் காண்பதற்கு பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
6.1. இலங்கை அரசின் அரசியலமைப்பின் அடிப்படையாகிய ஒற்றையாட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும்
6.2. இறுதித் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் முதலே ஆக்கப்பூர்வமாக நடாத்தப்பட வேண்டுமாயின் வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடுகள், பொங்கு தமிழ் பிரகடனம் ஆகிய வரலாற்றுப் பதிவுகள் ஊடாக தமிழ் மக்களால் முன் வைக்கப்பட்ட, அதி முக்கிய அடிப்படைக் கோட்பாடுகளை மையப்படுத்தி, தமிழ் மக்களின் வேணவாவைப் பூர்த்தி செய்யும் தீர்வை இலக்காகக் கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகள் ஆவன: 1) தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தல். 2) தமிழ் மக்களினுடையதாக அடையாளம் காணப்பட்ட, வரலாற்று ரீதியான மற்றும் பாரம்பரியமான தாயகப் பிரதேசத்தை அங்கீகரித்தல். 3) மேற்குறிப்பிட்ட உரித்துடைமையின் அடிப்படையில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும். 6.3. பேச்சுவார்த்தைகளின் போது சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் (பலதுறை நிபுணர்கள் குழு) சேர்க்கப்பட வேண்டும். அத்துடன் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய புலம்பெயர் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட வேண்டும்.
6.4. தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைச் சூழல் ஏற்படும்பட்சத்தில், அது சர்வதேச மத்தியஸ்தத்துடனும், வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும்.
6.5. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது இஸ்லாமியத் தமிழ் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோரின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும்.
6.6. முன்னைய பேச்சுவார்த்தைகளைப் போல் அல்லாமல் நடுநிலையுடனும், நேர்மையுடனும் நடுவராகச் செயற்படுமாறு சர்வதேச சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறோம். மேலே கூறப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறையில் திருப்திகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை ஆராய்ந்து உறுதிப்படுத்திய பின்னரே, எந்தவொரு நிதி வழங்கும் நாடுகளும் மற்றும் நிறுவனங்களும் சிறிலங்காவிற்கு பொருளாதார உதவி வழங்கத் தொடங்கவேண்டும் என நாம் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறோம்.
மரபுவழித் தாயகம்:
இறுதித் தீர்வை எட்டுவது என்பது, வன்முறைச் சுழற்சிகள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கும், இலங்கையில் நிலையான அமைதியை அடைவதற்கும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்கும் முக்கியமாக உள்ளதென்பதை இப்பிராந்தியத்தை அக்கறையோடு கையாளும் நாடுகள் உணர்ந்து செயற்படவேண்டும்.
ஈழத் தமிழரின் தேசிய இனப் பிரச்சனையில் மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம், தன்னாட்சியுரிமை என்ற அடிப்படையில் எட்டப்படும் எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வும், சர்வதேசத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம், தமிழ் மக்களின் ஆணை பெறப்படவேண்டும் என்பதே எமது உறுதியானதும் அறுதியானதுமான நிலைப்பாடாகும். அத்துடன் ஈழத் தமிழர்களின் தலைவிதியை ஈழத் தமிழர்களே தீர்மானித்து, எம்மை நாமே ஆளக் கூடிய நிரந்தரத் தீர்வும் பொதுவாக்கெடுப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை, தமிழ் மக்கள் சார்பாக இந்தப் பிரகடனம் உலகுக்கு அறிவிக்கின்றது.