பொதுமக்கள் தேவையற்ற மேல் மாகாணத்துக்கான பயணங்களை தவிர்த்து கொள்ளுங்களென, யாழ். மாவட்ட செயலாளர் க. மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தற்பொழுது யாழ்மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளதென்றார்.
அத்துடன், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ராஜகிராமம், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாசையூர் மற்றும் திருநகர் ஆகிய பகுதிகள் தற்பொழுது முடக்கல் நிலையில் காணப்படுகின்றன எனவும், மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
‘இதனைவிட அரசாங்கத்தின் அறிவிப்பின்படி தூர இடங்களுக்கான போக்குவரத்து தற்பொழுது வழமைக்கு திரும்பியுள்ளது. ஆனால், இந்தப் போக்குவரத்தில் மிக அத்தியாவசியமான தேவையுடையோர் மாத்திரம் பயணம் செய்யவும். ஏனென்றால், கொழும்பு அல்லது மேல்மாகாணம் போன்ற இடங்கள் அபாயமான வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
‘அதே நேரத்தில் வட மாகாணத்துக்குள்ளான போக்குவரத்தில் எந்தவிதமான தடையும் இல்லை எனினும் மிகவும் விழிப்பாக தமது பயணங்களை மேற் கொள்ளுமாறும் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றோம்’ எனவும், அவர் தெரிவித்தார்.
குறிப்பாக மேல் மாகாணத்துக்குச் செல்பவர்கள் தங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்த அவர், தேவையற்ற இடங்களுக்கு செல்வதை தவிர்த்து தேவையான கடமைகளை மாத்திரம் முடித்துவிட்டு வருவது மிகவும் சிறந்ததெனவும் கூறினார்.