வட மாகாணத்தில் நேற்று மொத்தம் 29 பேருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட்19பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா -11, யாழ்ப்பாணம் -08, முல்லைத்தீவு -07, மன்னாரில் 03 பேருக்கே நேற்று தொற்று உறுதியானது. கிளிநொச்சியில் ஒரு தொற்று நோயாளர் கூட நேற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உத்தியோகபூா்வமாக கோவிட்19பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் வெளியிடப்படும் தொற்று நோயாளர் தொகை தொடர்பான அறிவிப்புக்களிலும் உத்தியோகபூர்வமற்ற வகையில் மாவட்ட ரீதியாக பெறப்படும் தரவுகளுக்கும் இடையே முரண்பாடுகள் அவதானிக்கப்பட்டு வருகிறது.
முன்னர் மாவட்ட ரீதியில் பதிவாகும் தொற்று நோயாளர்கள் தொகை குறித்த தரவுகள் அந்தத்த மாவட்ட பிராந்திய சுகாதார சேவை அலுவலகங்கள் ஊடாக வெளியிடப்பட்டன. பின்னர் இதற்குத் தடை விதிக்கப்பட்டு கோவிட்19பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் ஊடாகவே உத்தியோகபூா்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தத்கது.
ஆனால் நாளாந்த தொற்று நோயாளர் தொகை தொடர்பான பிராந்திய உத்தியோகப் பற்றற்ற முடிவுகளும் கோவிட்19பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தரவுகளும் முரண்படுகின்றமை தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை, யாழ். ஆய்வுகூடங்களில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாழ். மாவட்டத்தில் 28 பேர் உட்பட வடக்கில் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததுடன், இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 27 பேருக்கும் என 61 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக ஆய்வுகூடத்தரப்பில் இருந்து உறுதிசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.