வடக்கில், போதைவஸ்துக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கு, புனர்வாழ்வு நிலையமொன்றை நிர்மாணிப்பது அவசியமென, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
வடக்கில் அதிகரித்துள்ள போதைவஸ்து பாவனை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வடக்குப் பகுதிக்குக் கொண்டு வரப்படுகின்ற கஞ்சா, ஹெரோய்ன் போன்ற போதைப்பொருள்கள் கடத்தப்படுவது உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமெனவும் அதேபோல் அரசாங்கத்தின் பல வகையான கட்டுப்பாட்டு நிலைமைகளை மேலும் கட்டுக்கோப்புக்குள் கொண்டுவர வேண்டுமெனவும் தெரிவித்தார்.
போதைவஸ்துக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்து, சிகிச்சை வழங்குவதற்கு பொருத்தமான நிலையம் வடபகுதியில் இல்லையெனத் தெரிவித்த அவர், ஆகவே வடக்கு பகுதியில், புனர்வாழ்வு நிலையம் ஒன்றை அமைக்க வேண்டுமெனவும் அதற்கான முயற்சியைத் தாங்கள் முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.