உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்தல், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வடக்குக்கு நேரடியாக மேற்கொண்ட விஜயத்தின்போது கண்காணிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வடக்கு விஜயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ரோஹிணி மாரசிங்க தலைமையில், மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் அனுஷா சண்முகநாதன் மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் குழு வடக்கு மாகாணத்தில் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த 16, 17 மற்றும் 18ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் நகரத்தை கேந்திரமாகக் கொண்டு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இந்த விஜயத்தின்போது மூன்று விடயங்களில் அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.
அதற்கமைய, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு சுயாதீனமான புனர்வாழ்வளித்தல், நிலையத்தை ஸ்தாபித்தல், போதைப்பொருள் விற்பனை, கடல் மார்க்கமாக இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல், வடக்கு மாகாணத்தில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் போக்குவரத்து சோதனைச் சாவடிகள் மற்றும் அமைக்கப்பட்டுள்ள வீதித்தடைகள் தொடர்பில் ஆராய்தல், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்தல், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய்தல் என்பனவே குறித்த 3 முக்கிய விடயங்களாகும்.
இந்த விஜயத்தில் பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள், மதத் தலைவர்கள், வடக்கு மாகாண அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், காணாமல் போன மற்றும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் பிரதிநிதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடன் ஆணைக்குழு சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில் புதன்கிழமை (22) மேற்கூறப்பட்ட காரணிகள் தொடர்பிலும், அவற்றில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்காணிப்பு மற்றும் பரிந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.