ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் ஊடக மன்றத்தில் இன்று இடம்பெற்றது.
குறித்த ஊடக சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் கொரோனாவில் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் வடக்கு ஆளுநர் இது தொடர்பில் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை எனவும் சுகாதார அமைச்சும் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
அத்துடன் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில் அது தொடர்பான வேலைத்திட்டங்களுக்கு இராணுவ அதிகாரிகளை நியமிக்கும் அரசாங்கம் குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வில்லை என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது பங்குபற்றிய ஊடகவியலாளர்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்த நிலையில் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்றும் இது தொடர்பான சரியான விளக்கத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளராக மாவை சேனாதிராஜா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் எனவும் இவ்வாறான தெரிவுகள் தொடர்ந்தும் இருப்பின் மக்களின் தேவைகளை கூட்டமைப்பு எவ்வாறு நிறைவேற்றப் போகிறது எனவும் இதன்போது கேள்வி எழுப்பினார்.