நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், வெப்ப சுட்டெண் ஆலோசனையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைப் பயன்படுத்தி வெப்பசுட்டெண் கணக்கிடப்படுவதுடன், இது ஒரு நபரின் உடலில் உணரப்படும் நிலை என்பது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் ஆலோசனையின்படி தயாரிக்கப்பட்ட சுட்டெண்ணின்படி, ‘எச்சரிக்கை’ நிலை என்பது நீண்டகால வெளிப்பாடு மற்றும் செயல்பாடுகளால் சோர்வு மற்றும் வெப்ப பிடிப்புகளையும் ஏற்படுத்தலாம்.
கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுமாறும், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகளைக் கவனிக்குமாறும், வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நீராகாராங்களைப் பருகுமாறும், முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.