பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காணப்படுவதனால் தம்மை வடக்கு கிழக்கிலுள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றுமாறு அநுராதபுரம் சிறைச்சாலையிள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான விசாரணையானது கைதிகளின் வாக்குமூலத்திலேயே தங்கியுள்ளது என்பதால், உண்மையை முழுமையாக பதிவுசெய்ய வேண்டும் என அவர்களிடம் சுட்டிக்காட்டியதாக முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.
அநராதபுரம் சிறைச்சாலைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற மதுபோதையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாழிடச் செய்து துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பம் தலைமையிலான குழுவினர் இன்று காலை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக சென்றிருந்தனர்.
எனினும் சிறைச்சாலைகள் அமைச்சில் அனுமதி பெறாது வருகைதந்துள்ளதாக கூறி, கைதிகளை பார்வையிட அவர்களுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதி மறுத்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடியதை தொடர்ந்து அவர்களுக்கு அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் முன்னணியின் சட்டத்தரணி காண்டீபன் உள்ளிட்டவர்கள் சிறைக்கைதிகளை பார்வையிட்டிருந்தனர்.
சிறைக்கைதிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமது வழக்கு விசாரணைகள் மற்றும் இடமாற்றம் தொடர்பில் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்தாக தெரிவித்தார்.