வடக்கு கிழக்கு தமிழ் ஊடகவியலாளர்களின் கோரிக்கையை தடுத்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு!

You are currently viewing வடக்கு கிழக்கு தமிழ் ஊடகவியலாளர்களின் கோரிக்கையை தடுத்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு!

வடக்கு கிழக்கு தமிழ் ஊடகவியலாளர்களின் கோரிக்கையை ஜனாதிபதியிடம் வழங்க விடாது தடுத்த  சிறீலங்கா ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு

இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 06/08/2024 அன்று கலந்துரையாடிய நிகழ்வு ஒன்று கொழும்பில் இடம்பெற்றது

இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக அமைப்புக்கள் சில தமது கடுமையான எதிர்ப்பையும் இந்த கலந்துரையாடலை புறக்கணிப்பதாகவும் அறிவித்திருந்தன இதற்கான நியாயமான காரணங்களையும் அவை வெளிப்படுத்தி இருந்தன

இந்நிலையில் ஏற்ப்பாட்டாளர்களின் கோரிக்கைக்கு அமைய வடக்கு கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்

இவ்வாறான பின்னணியில் கலந்துகொண்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சார்பில் கொல்லப்பட்ட கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி கோரிக்கை அடங்கிய தமிழ் ஊடகவியலாளர்களின் நிலைப்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் மிக முக்கிய கடிதம் ஒன்றை கையளிப்பதற்காக எடுத்துச்சென்ற போது அதனை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் ஜனாதிபதியிடம் எடுத்து செல்ல முடியாது என தடைவிதித்துள்ளனர்

அத்தோடு குறித்த கலந்துரையாடலில் ஊடகவியலாளர்களின் கருத்துக்கள் தெரிவிக்க சிலருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதும் வடக்கு ஊடகவியலாளர் யாருக்கும் அந்த சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை

அத்தோடு குறித்த கூட்டத்தில் சிலரது கோரிக்கை கடிதங்கள் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்ட போதும் தமிழ் ஊடகவியலாளர்களின் கடிதத்தை வழங்க விடாது தடுத்தமை தொடர்பில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருடனும் ஊடகவியலாளர்கள் முரண்பட்டிருந்தனர்

இருப்பினும் இந்த செயற்ப்பாட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்ட ஊடகவியலாளர்கள் தமது கடிதத்தை பாதுகாப்பு பிரிவிடம் பெற்றுக்கொண்டு இதற்கான பதிலினை ரணில் விக்கிரம சிங்க அவர்கள் முடிந்தால் வேட்ப்புமனு தாக்கல் செய்ய முன்னர் பொது வெளியில் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஊடகவியலாளர்கள் ஜனாதிபதியிடம் கையளிக்க எடுத்துச் சென்ற கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு

தமிழ் மண்ணில் நீதி கிடைக்காத ஊடகவியலாளர்கள் தொடர்பாக

நீங்கள் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய பின்னர் முதன்முறையாக கொழும்பில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களை சந்திக்க தீர்மானித்துள்ளீர்கள்.

கடந்த வாரம் மற்றும் மே மாத இறுதியில் நீங்கள் வடக்கிற்கு விஜயம் செய்த இரு சந்தர்ப்பங்களிலும் பிரதேச ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிடுவதை தடை செய்த அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில், எங்களுடனான சந்திப்பு தேர்தல் பிரச்சாரத்தை இலக்காகக் கொண்டது என நம்புகின்றோம்.

அரச வளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பல்வேறு செயற்பாடுகள் எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்ட, வேட்பாளர் ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களாக இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் ஜனாதிபதி செயலாளருக்கு அறிவித்துள்ளமை எமது அவதானத்திற்கு உட்பட்டுள்ள நிலையில், நாங்கள் உட்பட நாட்டின் அனைத்து பிரதேச ஊடகவியலாளர்களையும் கொழும்புக்கு அழைத்துள்ளீர்கள்

எவ்வாறாயினும், வடக்கு, கிழக்கில் ஊடக சுதந்திரம் தொடர்பில் பல தசாப்தங்களாக எந்தவொரு அரசாங்கத்தினாலும் பதிலளிக்கப்படாத ஒரு நீளும் பிரச்சினையை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

யுத்த காலத்திலிருந்து இன்று வரை, நாட்டில் சுமார் ஐம்பது தொழில்முறை சகாக்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அவர்களில் எவருக்கும் நீதி வழங்கப்படவில்லை.

அதில், 2004ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை படுகொலை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் பட்டியல் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மனித உரிமைகள் தினத்தன்று ஊடகவியலாளர் மன்றத்தினால் நல்லாட்சியின் பிரதமரான உங்களிடம் கையளிக்கப்பட்டது.

அதில் 44 ஊடகவியலாளர்களின் விபரங்கள் இடம்பெற்றுள்ளதாக சபைக்கு அறிவித்தீர்கள்.

அதன் பின்னர் ஒரு நாள் யாழ்ப்பாண ஊடக மையத்தின் தலைவர் உங்கள் அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அதே பட்டியலை கையளித்தார்.

அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 41 பேர் தமிழ் மண்ணைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள். அவர்களில் எவருக்கும் நீதி வழங்க அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

இலங்கையில் இரண்டு தசாப்தங்களாக அந்த ஊடகவியலாளர்களுக்கு கிடைக்கத்தவறிய நீதியை நிறைவேற்ற வேண்டுமெனின், சர்வதேச கண்காணிப்புடனான நீதிமன்ற அதிகாரங்களை உள்ளடக்கிய ஒரு விசேட நீதிச் சபையை நிறுவுவது பொருத்தமானது என நாங்கள் நம்புகிறோம்.

அந்த கிடைக்கத்தவறிய நீதியை வழங்குவதற்கு தற்போதைய அரச தலைவர் எடுக்கும் நடவடிக்கைகள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்பட்டால் நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் (JDS) அமைப்பு தயாரித்துள்ள கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல் இந்த கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி
உண்மையுள்ள

வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்கள்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments